×

நோய் தாக்குதல் குறித்து வேளாண் அலுவலர்கள் வயலில் ஆய்வு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் தென்னை, நெல் வயலில் நோய் தாக்குதல் குறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அதிகாரிகள் வயலில் ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் வயலில் வேளாண்மை உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையில் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநகர் சரவணக்குமார், வேளாண்மை அலுவலர் சந்தியா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், புஞ்சை துறையாம்பாளையம் கிராமத்தில் திருவேங்கடசாமி என்ற விவசாயிக்கு சொந்தமான தென்னை வயலில் ஆய்வு செய்தபோது, தென்னையில் பென்சில் முனை நோய் பாதிப்பு மற்றும் தென்னையில் ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பென்சில் முனை நோய் பாதிப்புகளை சரி செய்ய பொட்டாஷ் மற்றும் போரான் நுண்ணூட்ட சத்துக்களை பாதிக்கப்பட்ட மரங்களுக்கு வழங்க பரிந்துரைத்தனர். ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த என்கார்சியா ஒட்டுண்ணி பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்றனர். மேலும், வாணிப்புதூர் ஜமேசா என்ற விவசாயிக்கு சொந்தமான நெல் வயலில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், நெல்லில் மேலூட்டமாக பேரூட்ட சத்துக்களை வழங்கவும், இலை சுருட்டப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த டிரைக்கோகிராம ஒட்டுண்ணி அட்டைகளை வைத்து கட்டுப்படுத்திடவும் பரிந்துரைத்தனர். இந்த ஆய்வின்போது, உதவி வேளாண்மை அலுவலர் சுதா, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நோய் தாக்குதல் குறித்து வேளாண் அலுவலர்கள் வயலில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : disease outbreak ,Erode ,Agriculture-Farmer Welfare Department ,Erode district ,T.N.Palayam ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...