×

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து மறுதேர்தலில் கூடுதல் படைகளை அனுப்ப கோரி எல்லை பாதுகாப்பு படைக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்.!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து மறுதேர்தலில் கூடுதல் படைகளை அனுப்ப கோரி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார். மேற்கு வங்கத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகளும் நடந்தன. முர்ஷிதாபாத் மாவட்டம், வன்முறையின் மையப்புள்ளியாக இருந்தது. மால்டா, உத்தர் தினாஜ்பூர், கூச்பெகர், நடியா, வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள் ஆகிய மாவட்டங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது தாக்கப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். தேர்தலின்போது நடந்த வன்முறையால் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த வேட்பாளர் உள்பட 9 பேர், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர், பாஜகவை சேர்ந்த ஒருவர், ஒரு வாக்காளர் ஆகிய 15 பேர் பலியானார்கள். தேர்தலுக்கு பின் நடந்த வன்முறையால், மால்டா, தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டங்களில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த தலா ஒருவர் பலியானார்கள். இதனால், பலி எண்ணிக்கை 17 ஆனது. இத்துடன், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நடந்த வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் 5 மாவட்டங்களில் உள்ள 697 வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்த முடிவானது.

இதன்படி புரூலியா, பிர்பும், ஜல்பைகுரி, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 5 மாவட்டங்களில் மறுதேர்தல் நடத்தப்பட உள்ளது. இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் மீண்டும் நடைபெற உள்ளது. இந்த மறுதேர்தலுக்கு கூடுதல் படைகளை அனுப்பும்படி மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி.க்கு (கிழக்கு மண்டலம்) கடிதம் எழுதி உள்ளார். வன்முறை சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கூடுதல் படைகளை அவர் கோரியுள்ளார். அனைத்து வாக்காளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க அவர் கோரிக்கை விடுத்து உள்ளதுடன், அந்த பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வரும்படியும் அவர் கேட்டு கொண்டார்.

The post மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து மறுதேர்தலில் கூடுதல் படைகளை அனுப்ப கோரி எல்லை பாதுகாப்பு படைக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்.! appeared first on Dinakaran.

Tags : Aadir Ranjan Choudri ,Border Security Force ,Panchayat ,West Bengal ,Kolkata ,Aadir Ranjan Choudhri ,Aadir Ranjan Saudi ,Dinakaran ,
× RELATED பெண்ணுக்கு பாலியல் தொல்லை தேர்தல்...