×

14வது தவணை பெற பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் ஆதார் எண்ணை உறுதி செய்யுங்கள்

 

அரியலூர், ஜூலை 10: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டமானது பிப்ரவரி 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 மூன்று தவணைகளில், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி அவசியம். நடப்பாண்டில், 14வது தவணையாக, அதாவது 2023, ஏப்ரல் மாதம் முதல் 2023 ஜூலை மாதம் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

எவ்வாறு ஆதார் எண்ணை உறுதி செய்வது? பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவோ ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். 1. உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று, தனது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில். (i) ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது (ii) பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். 2. உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்குச் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால், விவசாயிகள் தங்களது அருகாமையிலுள்ள வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.

The post 14வது தவணை பெற பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் ஆதார் எண்ணை உறுதி செய்யுங்கள் appeared first on Dinakaran.

Tags : Kisan ,Ariyalur ,Ariyalur District ,Animeri Swarna ,Tamil Nadu ,MM ,Dinakaran ,
× RELATED நெல் வயலில் பாசி கட்டுப்பாடு...