×

12ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கு 16ம் தேதி தகுதி பட்டியல் வெளியீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தர்மபுரி: மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வரும் 12ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தர்மபுரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைக்கான மேசை உள்ளிட்ட வசதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். மேலும் மாரண்டஅள்ளி, தீர்த்தமலை, கடத்தூர் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: நடப்போம் நலம் பெறுவோம் எனும் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோ மீட்டர் நடை பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் முதல்வர் இச்சாலைகளை திறந்து வைப்பார். இந்த நடைபாதைக்கு பயன்படும் சாலைகளில், சுகாதார துறையினர் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்படும். ஜப்பானின் டோக்கியோ நகரில் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபாதை அமைக்கப்பட்டு அதில் தினமும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதை முன்மாதிரியாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலோ அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியிலோ இன்டர்ன்ஷிப் காலம் உட்பட எம்பிபிஎஸ், பிடிஎஸ் முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி நிறுவனங்களில் இருப்பிட சான்றிதழ்களுடன், முதுகலை படிப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.‌ இதற்கு மாறாக வந்த செய்திகள் தவறானவை. பிற மாநிலங்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள், தமிழகத்தில் இன்டர்ன்ஷிப் காலம் உட்பட எம்பிபிஎஸ், பிடிஎஸ் முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள திறந்தவெளி அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக உடல் உறுப்பு மாற்று ஆணையம், தமிழகத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உடல் உறுப்பு தானம் பெறும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதற்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 20 ஆயிரம் மருத்துவர் பணியிடங்களில், 1021 பணியிடங்கள் மட்டுமே தற்போது காலியாக உள்ளது. ஒரு மாதத்திற்குள் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் மருத்துவம் படிப்பதற்கு 39,924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை 32,649 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதில் அரசு இடங்களுக்கு 22,541 மாணவர்களும், சுயநிதி இடங்களுக்கு 10,108 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு முதுகலை இடங்களுக்கு, இணையவழியில் விண்ணப்பங்கள் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கான அவகாசம் வரும் 10ம் தேதியில் இருந்து 12ம் தேதி மாலை 5மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒரே தேதியில் கலந்தாய்வு நடத்தும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அந்த தேதி அறிவிக்க இன்னும் 10 நாட்கள் ஆகலாம். ஆனால் அதுவரை காத்திருக்காமல், வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான தகுதி (மெரிட்) பட்டியல் வெளிப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 12ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கு 16ம் தேதி தகுதி பட்டியல் வெளியீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : MPBS ,BDS ,Minister ,M.Subramanian ,Dharmapuri ,Subramanian ,
× RELATED நீட் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு