×

நீயா….? நானா….?

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் வானில் அதற்கான மழை மேகங்கள் இப்போதே சேரத் தொடங்கிவிட்டன. இந்திய அரசியல் களத்தில் தனக்கு எதிரியே இல்லை என்ற இறுமாப்புடன் கொக்கரித்துக் கொண்டிருக்கும் ஆளும் பாஜவுக்கு, கர்நாடகா தேர்தல் ஒரு பெரிய சறுக்கல் என்றே கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து பூனைக்கு மணி கட்ட எதிர்கட்சிகள் துணிந்து விட்டன. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்கட்சிகளின் பிரமாண்ட கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் பாஜவுக்கு எதிரான எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே நேர்கோட்டில் நின்றன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வலுவாக இருக்கும் மாநிலங்களில் எதிர்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.

மேலும் குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு, ஆளும் பாஜவை வீழ்த்தவும் முடிவு செய்யப்பட்டது. சில தொகுதிகளில் பாஜவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாட்னாவில் கடந்த 23ம் தேதி நடந்த எதிர்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தை பார்த்தவுடனே, பாஜவுக்கு உள்ளூர பயம் வந்துவிட்டது. இருப்பினும் மீசையில் மண் ஒட்டாத குறையாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ‘அது வெறும் எதிர்கட்சிகளின் புகைப்பட கண்காட்சி’ என அலட்சியத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் பாட்னாவில் ஒன்றிணைந்த கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில், அடுத்த கூட்டத்தை வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் பெங்களூருவில் நடத்த போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. இப்படியே போனால் தேசிய ஜனநாயக கூட்டணி இருப்பதே மக்களுக்கு தெரியாமல் போய்விடுமே என்ற உள்ளூர உதறல் பாஜவுக்கு வந்துவிட்டது. எனவே வரும் 18ம் தேதி பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஒரே நாளில் நடக்கும் இவ்விரு கூட்டங்களால் மக்களவை பொது தேர்தலுக்கான தேசிய அரசியல் இப்போது தீ பிடித்து எரிகிறது.

‘எங்கும் நாம், எதிலும் நாம்’ என்ற தலைக்கனத்துடன் இருந்த பாஜவுக்கு, இக்கூட்டத்திற்காக உதிரி கட்சிகளை வலைவீசி பிடிப்பதே பெரிய வேலையாக உள்ளது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசில் இருந்து உடைக்கப்பட்ட அஜித் பவார் அணி, சிவசேனாவில் இருந்து பிரிந்த வந்த ஏக்நாத் ஷிண்டே அணி, தலித் தலைவரான ஜிதன்ராம் மஞ்சி ஆகியோரை இணைத்துதான் டெல்லியில் கூட்டத்தை நடத்திட பாஜ முடிவு செய்துள்ளது. லோக் ஜனசக்தி, சிரோமணி அகாலிதளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

ஒன் மேன் ஆர்மியாக இருக்கும் பாஜ, உதிரி கட்சிகளை ஒருங்கிணைத்தாவது ஒரு கூட்டத்தை காட்டி தங்கள் இருப்பை தக்க வைத்து கொள்ள முயல்கிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த அதிமுக சமீபகாலமாகவே மதில் மேல் பூனையாக உள்ளது. தமிழக தலைவர் அண்ணாமலையோடு உரசல், சிறுபான்மை ஓட்டுக்கள் பாதிப்பு ஆகியவற்றால் பாஜ கூட்டணி வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற கேள்விகள் கட்சிக்குள் பூதாகரமாக எழுப்பப்பட்டு வருகின்றன. அதிமுகவும் பாஜவை கை கழுவி விட்டால், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வெறும் பாஜ கூட்டமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

The post நீயா….? நானா….? appeared first on Dinakaran.

Tags : Nana ,
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...