×

தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை

மதுரை, ஜூலை 9: தென்னை மரங்களை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். டிராக்டருடன் இணைக்கப்பட்ட அல்லது தென்னைக்கான பிரத்யேக தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையின் அடிப்புறத்தில் பீய்ச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்க வேண்டும்.

மஞ்சள் ஒட்டுப்பொறிகளை ஒரு ஏக்கருக்கு 8 என்ற அடிப்படையில் தென்னை மரங்களுக்கு இடையே கட்டி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது பசை தடவி வைக்கலாம். இயற்கையிலேயே காணப்படும் என்கார்சியா ஒட்டுண்ணி கூட்டுப் புழுக்களை கண்டறிந்து ஒரு ஏக்கருக்கு 10 ஓலைத் துணுக்குகளை தென்னை மரங்களில் பரவலாக ஓலையில் பொருத்த வேண்டும். கிரைசோபெர்லா இரை விழுங்கி முட்டைகளை ஒரு ஏக்கருக்கு 400 வீதம் பாதிக்கப்பட்ட தென்னை இலைகளில் ஆங்காங்கே பொருத்த வேண்டும். கண்டிப்பாக ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கக்கூடாது. தாக்குதல் மிக அதிகமாக இருந்தால் அசாடிராக்டின், வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளித்துக் கட்டுப்படுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும்...