×

சத்துணவு அமைப்பாளர் முட்டை முறைகேட்டில் அதிரடி சஸ்பெண்ட்: திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு

தண்டராம்பட்டு, ஜூலை 9: தண்டராம்பட்டில் அதிமுக நகர செயலாளராக உள்ள சத்துணவு அமைப்பாளர் மாணவர்களுக்கு முட்டை வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்து திருவண்ணாமலை கலெக்டர் அதிரடி உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் அரசு மாதிரி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 547 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ், தமிழ்வழிக்கல்வி, ஆங்கில வழிக்கல்வி மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்திலேயே முன்மாதிரியாக இந்த தொடக்கப்பள்ளி விளங்குகிறது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையில் முறைகேடு நடந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீெரன பள்ளியில் ஆய்வு செய்தனர். அப்போது மாணவ, மாணவிகளிடம் சத்துணவில் அனைவருக்கும் முட்டை வழங்கப்படுகிறதா? என்று விசாரணை மேற்கொண்டனர். அதில் மாணவர்கள் வீட்டிலிருந்து உணவு எடுத்து வந்து சாப்பிட்டால் முட்டை கிடையாது எனவும், பள்ளியில் வழங்கும் சத்துணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே முட்டை வழங்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவிப்பதாக மாணவர்கள் கூறினர்.

இதையடுத்து சத்துணவு பதிவேடு புத்தகத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தார். அதில் 547 முட்டைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதாக மாதந்தோறும் கணக்கு எழுதி வைத்திருந்துள்ளனர். இதன் மூலம் முட்டை வழங்காமலேயே முட்டை வழங்கியதாக கணக்கு எழுதி வைத்து முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பேரில் சத்துணவு அமைப்பாளர் தேவேந்திரனை சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் இரவு கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டார்.

The post சத்துணவு அமைப்பாளர் முட்டை முறைகேட்டில் அதிரடி சஸ்பெண்ட்: திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Thandarrampattu ,AIADMK ,Thandarrampatt ,
× RELATED சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த...