×

சின்னசேலம் அருகே டிரைவரை கடத்திய வழக்கில் பொக்லைன் உரிமையாளர் பகீர் வாக்குமூலம்

சின்னசேலம், ஜூலை 9: சின்னசேலம் அருகே பொக்லைன் டிரைவரை கடத்திய வழக்கில் கைதான பொக்லைன் இயந்திர உரிமையாளர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சின்னசேலம் அருகே கூகையூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் திட்டக்குடி அருகே புலிக்கரம்பலூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளாக பொக்லைன் டிரைவராக வேலை செய்ததாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் கொடுக்கல், வாங்கலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சமீபகாலமாக சக்திவேல் அவரிடம் வேலைக்கு செல்லவில்லை. இதனால் வாடகை பணம் பாக்கித்தொகை தரவேண்டும் என்று பரமசிவம் தனது ஆட்களை வைத்து சக்திவேலை கடத்தி சென்றுள்ளார். இந்த வழக்கில் பரமசிவம் உள்ளிட்ட 8பேர் கீழ்குப்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கைதான பொக்லைன் உரிமையாளர் பரமசிவம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தல் கூறியிருப்பதாவது: நான் கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, புலிக்கரம்பளூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். மேலும் கடந்த 2016ல் பொக்லைன் இயந்திரம் வாங்கி தொழில் செய்து வந்தேன். அப்போது ஜேசிபி குரூப்பில் டிரைவர் தேவை என்று பதிவு போட்டேன். அப்போது கூகையூரை சேர்ந்த ராமசாமி மகன் சக்திவேல் என்பவர் என்னிடம் வந்து டிரைவராக வேலை கேட்டார். நானும் சேர்த்துக்கொண்டேன். கடந்த 2016ல் நல்ல முறையில் வண்டியை ஓட்டி வந்தார்.

மேலும் கடந்த 2017ல் என்னுடைய பொக்லைன் வண்டியை எடுத்துக்கொண்டு சக்திவேல் சிவகாசிக்கு கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு சென்றார். மேலும் எனக்கு மாத வாடகை ரூ,70,000 தருவதாகவும் கூறினார். ஆனால் சக்திவேல் எனக்கு சரிவர பணம் தரவில்லை. மேலும் திடீரென்று ஒருநாள் சிவகாசி கம்பெனி மேலாளர் எனக்கு போன் பண்ணி வண்டி 2 நாட்களாக ஓடவில்லை என கூறினார். நான் அங்கு சென்று பார்த்தபோது வண்டி அங்கு நின்று கொண்டிருந்தது. கம்பெனி மேலாளரிடம் சென்று வாடகை கேட்டபோது வாடகை பணத்தை அவரிடம் செட்டில் செய்து விட்டேன் என்று கூறினார்.

அதனால் நான் வண்டியை என் ஊருக்கு எடுத்து வந்து விட்டேன். மேலும் இதுகுறித்து கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அதன்பேரில் சக்திவேலை பிடித்து வந்து ராமநத்தம் போலீசார் வாடகை பாக்கித்தொகை ரூ3,65,000ஐ தருவதாக எழுதி வாங்கி கொடுத்தனர். ஆனால் சக்திவேல் அதன்பிறகும் பணத்தை கொடுக்க முன்வரவில்லை. இதனால் அவனை கடத்தி சென்று பணத்தை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதையடுத்து என்னிடம் வேலை செய்த டிராக்டர் டிரைவர் ரமேஷ் உள்ளிட்ட அவரது நண்பர்களுடன் ஆலோசனை செய்தேன்.

அதன்பேரில் கடந்த 4ம்தேதி பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்து விட்டதாக நாடகமாடி சக்திவேலை நான் உள்ளிட்ட 8பேர் கடத்தி சென்று அடித்து பணத்தை கேட்டோம். என்னை அடிக்காதீங்க, பணத்தை தந்து விடுகிறேன் என கெஞ்சினான். மேலும் அவனது அம்மாவிடமும் போன் போட்டு உங்கள் மகன் சக்திவேலை நாங்கள்தான் கடத்தி வைத்திருக்கிறோம். பணம் ரூ.5லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறோம். போலீசுக்கு போனால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினோம். மேலும் இடத்தை மாற்றி கடைசியாக எனது வீட்டு மாடியில் வைத்து அடித்து பணத்தை கேட்டோம். ஆனால் சக்திவேலின் தாய் போலீசுக்கு தகவல் கொடுத்ததால், போலீசார் எங்களை பிடித்து சக்திவேலை மீட்டனர். இவ்வாறு பரமசிவம் வாக்குமலம் அளித்துள்ளார்.

The post சின்னசேலம் அருகே டிரைவரை கடத்திய வழக்கில் பொக்லைன் உரிமையாளர் பகீர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Bagline ,Bagheer ,Chinnasalem ,Dinakaran ,
× RELATED வித்தியாசமான தகவல்கள்