×

வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு

கோவை, ஜூலை 9: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் வருகை அதிகமாகி விட்டது. திருப்பூர் பனியன், விசைத்தறி நிறுவனங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிமாவட்ட, வெளி மாநில தொழிலாளர்களும், கோவை லேத் ஒர்க்‌ஷாப், பவுண்டரி, பம்பு, ஆட்டோ மொபைல், நகை பட்டறைகளில் சுமார் 2 லட்சம் வெளியூர்வாசிகளும், ஈரோட்டில் பெட்சீட், நெசவு தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளியூர்காரர்களும் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக நைஜீரியா, கனடாவில் இருந்து வேலை தேடி தொழிலாளர்கள் வருவது அதிகமாகி விட்டது. வெளி மாநிலம், வெளி நாட்டில் இருந்து வரும் தொழிலாளர்கள் குற்றங்களில் ஈடுபடுவது அடிக்கடி நடக்கிறது. பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கோவை மண்டலத்தில் தொழில் நிறுவன குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.

இவர்களில் சிலர் போலி அடையாள அட்டைகளுடன் தங்கியிருப்பதாக தெரிகிறது. குற்றங்களில் ஈடுபடும் இவர்கள் தப்பி சென்றால் போலீசார் பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் காண ஆதார் அட்டை மற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 120 போலீஸ் ஸ்டேஷன்களில் தொழிலாளர்களின் முழு விவர பட்டியல் சேகரிக்கும் வகையில் பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம், டெனன்ட் வெரிபிகேசன் சிஸ்டம் (வாடகை குடியிருப்பாளர்கள்) அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை தொடர போலீசார் முன் வரவில்லை.

தொழில் நிறுவனங்களிடம் தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க, போலீஸ் ஸ்டேஷனில் இதற்கான பதிவேடு தயாரிக்க போலீசார் தீவிரம் காட்டவில்லை. குற்றவாளிகளை தடுக்கும் இரு பெரிய திட்டமும் போலீசார் கவனிக்காதால் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கி விட்டது. வெளி மாநில தொழிலாளர்களால் தகராறு, தாக்குதல் தொடர்பாக அடிக்கடி புகார் வருகிறது. இந்தி, மராத்தி, ஒரியா பாஷை பேசும் தொழிலாளர்களை விசாரிக்க முடியாமல் உள்ளூர் போலீசார் திணறுகின்றனர். வெளி மாநில தொழிலாளர்கள் மீது புகார் வந்தால் எங்களால் பேச முடியாது என போலீசார் மறுத்துவிடுகின்றனர். மில்களில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள், கோவையில் தங்களுக்கு பழக்கமாகும் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அழைத்து சென்று குற்றங்களில் ஈடுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது. வெளி மாநில போலீசார் குற்றவாளிகளை பிடிக்க கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல நாட்கள் முகாமிட்டு தேடுவது வாடிக்கையாகி விட்டது.

ஐ.எஸ் ஆதரவு கும்பல் தொடர்பாக அடிக்கடி புகார்கள் வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்களை போதுமான அடையாள ஆதாரம் இல்லாததால் உள்ளூர் போலீசாரால் பிடிக்க முடியவில்லை. தேசிய புலனாய்வு பிரிவினர் (என்.ஐ.ஏ) கோவையில் தற்காலிக முகாம் அலுவலகம் அமைத்து தேடுதல் பணி நடத்தி வருகிறது. கோவை மண்டலத்தில் மாவோயிஸ்ட், நக்சல், ஐ.எஸ் ஆதரவாளர்கள, கொலை, கொள்ளை குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவினரும் புகார் கூறியுள்ளனர். உள்ளூர் போலீசார் போதுமான ஆள்பலமில்லை என்பதால் வெளிமாநில தொழிலாளர்கள், குற்றவாளிகள் தொடர்பாக போதுமான நடவடிக்கை முடியாமல் இருக்கின்றனர். வடமாநில தொழிலாளர்கள் பதிவு, அடையாள அட்டை, முன் தகவல்கள் சேகரிப்பு தீவிரமாக இருந்தால் தான் குற்றங்களை குறைக்க முடியும். போலீசார் இதில், ஆர்வம் காட்ட வேண்டும் என தொழில் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

The post வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore, Tirupur, Erode district ,Tirupur Banyan ,Dinakaran ,
× RELATED கோவை புத்தகத் திருவிழாவில் சாழல் சொற்போர் நிகழ்வு