×

தமிழகத்தில் உள்ள 90 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படுகிறது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 90 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பாரம்பரியமிக்க நீராவி இன்ஜின் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள புதிய மின்சார ரயில் இன்ஜின் மற்றும் ரயில்வே சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளையும் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ரயில்வே துறையில் பல்வேறு வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பழைய நீராவி இன்ஜின் என்பது பலரின் நினைவாக உள்ளது. இந்தியாவில் அறிவியல் சார்ந்த வளர்ச்சி ஒரு புறம் ஏற்பட்டு வந்தாலும் நம்முடைய பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணமாக உள்ளது. அந்த வகையில் நீராவி இன்ஜின் வடிவில் புதிய மின்சார ரயில் அமைக்கப்பட்டு உள்ளது. மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ள பெரம்பூர் மற்றும் ஆவடி ரயில்வே அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பாதுகாப்பு அங்கீகாரம் இந்த ரயிலுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2 முதல் 3 மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த ரயில் பாரம்பரிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

எந்த பகுதிகளில் இயக்க உள்ளோம் என்பது குறித்து முடிவு செய்யவில்லை. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை செய்ய உள்ளோம். ரயில்வே வளர்ச்சிக்காக 2014ம் ஆண்டு வரை சராசரியாக தமிழகத்திற்கு ரூ.870 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ரூ.6017 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன் காரணமாகவே தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டு 90 ரயில் நிலையங்கள் தமிழகத்தில் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை வாரத்திற்கு ஒரு புதிய ரயிலை உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தமிழகத்தில் உள்ள 90 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படுகிறது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Railway Minister Ashwini Vaishnav ,Chennai ,Railway Minister ,Ashwini ,Dinakaran ,
× RELATED சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட...