×

விழுப்புரம் அருகே பூவரசன்குப்பத்தில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம்

விழுப்புரம்: பூவரசன்குப்பம் கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்த லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், 150 ஆண்டுகளுக்குப் பின், பிரமோற்சவ விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 32 அடி உயரத்தில் புதிய தேர் செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி வெள்ளோட்ட விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பிரம்மோற்சவ விழா, கடந்த 30ம் தேதி தொடங்கியது. இவ்விழா, தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம், கடந்த 6ம் தேதி நடைபெற்றது. 9ம் நாளான இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, காலை 7.30 மணிக்கு மேளதாளம் முழங்க, லட்சுமி நரசிம்ம பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு தேர் புறப்பாடானது. விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணன் தலைமை தாங்கி, இத்தேரை வடம் பிடித்து இழுத்து வைத்தார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயிலில் தேர் புறப்பட்டு, 4 மாடவீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post விழுப்புரம் அருகே பூவரசன்குப்பத்தில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Lakshmi Narasimha ,Poovarasankuppam ,Villupuram ,Temple ,Chariotam ,
× RELATED நலங்கள் அருள்வார் நரசிம்மர்!