×

அபகரிக்கும் நோக்கில் பலகை வைத்து நீர்பிடிப்பு பகுதி கரையை உடைத்தவர் மீது வழக்கு: அதிகாரிகள் நடவடிக்கை

பல்லாவரம்: பொழிச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நீர்பிடிப்பு பகுதியான தாங்கல் நிலம் உள்ளது. கனமழை நேரங்களில், அனகாபுத்தூர் பகுதிகளில் தேங்கும் மழைநீர் இந்த தாங்கல் நிலத்தின் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. இதனால், மழை காலங்களில் அனகாபுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ள பாதிப்பு தடுக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் பொழிச்சலூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், சுமார் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இந்த தாங்கல் நீர்பிடிப்பு பகுதியில் கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இந்த பணி நிறைவடையும் தருவாயில் இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர், இது தங்களது இடம் என்றுகூறி, அரசு செலவில் பலப்படுத்தப்பட்ட கரைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து, சேதப்படுத்தி, விளம்பர பதாகை வைத்துவிட்டு சென்றார். தகவலறிந்து வந்த கலெக்டர், தாசில்தார் ஆகியோர் சேதமடைந்த இடத்தை பார்வையிட்டு, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை அகற்றினர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post அபகரிக்கும் நோக்கில் பலகை வைத்து நீர்பிடிப்பு பகுதி கரையை உடைத்தவர் மீது வழக்கு: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Pozichalur Government Initial Health Station ,Anagapattur ,Dinakaran ,
× RELATED சலுகை விலை அறிவிப்பால் துணிக்கடையில்...