×

வீடுகளில் பூட்டு உடைத்து திருடிய வாலிபர் கைது 8 சவரன் நகைகள் பறிமுதல் சேத்துப்பட்டில் போலீஸ் ரோந்து

சேத்துப்பட்டு, ஜூலை 8: சேத்துப்பட்டு பகுதியில் போலீசார் ரோந்து பணியின்போது, வீடுகளில் பூட்டு உடைத்து நகை, பணம் திருடிய வாலிபரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 8 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நரசிங்கபுரம் மதுரா கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(43), விவசாயி. இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அதே ஊரில் நடந்த கோயில் திருவிழா நாடகத்திற்கு சென்றார். நாடகம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 1 சவரன் நகை, ₹10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவிகாபுரம் பஜாரில் சந்தேகப்படும்படி கையில் இரும்பு கோடாரியுடன் நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தேவிகாபுரம் நாவிதர் தெருவை சேர்ந்த சாரங்கன் மகன் சுதாகர்(39) என்பதும், 1 சவரன் நகைளை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சுதாகரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சுதாகர் கன்னிகாபுரம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 1 சவரன் நகை திருடியதும், சேத்துப்பட்டில் கடந்த 2019ம் ஆண்டில் காதர்மொய்தீன் என்பவர் வீட்டில் சுமார் 22 சவரன் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து போலீசார் அவர் பதுக்கி வைத்திருந்த 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். கைதான சுதாகர் மீது சென்னை ஆவடி, செங்கல்பட்டு, போளூர், திருப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சமீபத்தில் தான் சுதாகர் சென்னை புழல் சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து சுதாகரை நேற்று போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post வீடுகளில் பூட்டு உடைத்து திருடிய வாலிபர் கைது 8 சவரன் நகைகள் பறிமுதல் சேத்துப்பட்டில் போலீஸ் ரோந்து appeared first on Dinakaran.

Tags : Sethupat ,Sethupattu ,
× RELATED சேத்துப்பட்டு மாதாமலையில் வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம்