×

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 34 ஜோடிகளுக்கு திருமணம் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்: மணமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சார்பில் 34 ஜோடிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து, மணமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டி, தமிழ் உணர்வை குழந்தகளுக்கு ஊட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று, இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சார்பில் 34 இணைகளுக்கான திருமணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர் வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை சிறப்புப் பணி அலுவலர் குமரகுருபரன், இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் முரளீதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து துறைகளிலும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் அரசு செயல்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையும் மற்ற துறைகளுடன் போட்டிப்போட்டு மிக சிறப்பாக செயல்படுகிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது போல இன்று 34 ஜோடிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது போன்ற அறப்பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அனைத்து ஜோடிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்வது, குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள், தமிழ் உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டுங்கள். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், ‘வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்’ இருந்து நீங்கள் பாடுபடுங்கள், பணியாற்றுங்கள், உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டு, வாழ்த்தி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 34 ஜோடிகளுக்கு திருமணம் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்: மணமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Foundation ,Principal ,Mukharashi Mukharashi G.K. Stalin ,Chennai ,Chief of ,Hindu Religious State Department ,Thirukoils ,G.K. Stalin ,B.C. ,
× RELATED 36 ஆண்டுகளாக பக்தர்கள் ஆவலுடன்...