×

ஹவுராவில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்த பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து: 4 பெட்டிகள் எரிந்து நாசம்; 800 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருமலை: ஹவுராவில் இருந்து செகந்திராபாத்திற்கு நேற்று காலை வந்த பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெட்டிகள் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 800 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு நேற்று முன்தினம் `பலக்னுமா’ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பகிடிப்பள்ளி மற்றும் பொம்மப்பள்ளி இடையே நேற்று காலை 11.30 மணியளவில் சென்றபோது திடீரென ஒரு ரயில் பெட்டியில் உள்ள செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயின்டில் இருந்து புகை வந்துள்ளது.

இதனை கவனித்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அதற்குள் குபுகுபுவென புகை வந்து தீப்பிடித்தது. பின்னர் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பயணிகள் அலறியடித்தபடி ஒருவர் மீது ஒருவர் விழுந்தடித்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதில் முதியோர் மற்றும் குழந்தைகளை வைத்திருந்தோர் ரயிலை விட்டு வேகமாக இறங்குவதற்கு கடும் அவதிப்பட்டு, கதறியபடி இறங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் தீப்பிடித்து 6 ரயில் பெட்டிகள் மளமளவென எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ வேகமாக பரவி எஸ்3, எஸ்4, எஸ்5, எஸ்6 என நான்கு பெட்டிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் தங்களது உடமைகளை ரயிலில் இருந்து எடுக்கதாதால் அவை ரயில் பெட்டிகளிலேயே கருகியது.

உடனடியாக தீ மேலும் பரவாமல் இருக்க ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 4 படை குழு கொண்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்கான ரசாயனம் மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடித்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 800 பேர் பயணித்துள்ளனர். தீப்பிடித்த 6 பெட்டிகளில் 200 பேர் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். நடுவழியிலேயே இறங்கிய ரயில் பயணிகள் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே மற்றும் மாநில போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

* நடுங்க வைத்த கடிதம்
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தென்னக ரயில்வே துறையை நடுங்க வைத்த கடிதம் ஒன்று ரயில்வே துறைக்கு வந்தது. அதில் ‘ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தை போன்று தெலங்கானா மாநிலத்தில் ஒரு பயங்கர விபத்து ஏற்படும்’ என்று எழுதப்பட்டு, முன்கூட்டியே தகவல் வந்தது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஹவுராவில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்த பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து: 4 பெட்டிகள் எரிந்து நாசம்; 800 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Palaknuma ,Howrah ,Secunderabad ,Balaknuma Express Train ,Dinakaran ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி