×

கண்ணற்ற சூர்தாசரின் உள்ளத்தில் கண்ணன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

துளசிதாசர் பிறந்த அதே 16-ஆம் நூற்றாண்டில், சூர்தாசரும் பிறந்தார். சூர்தாசர், மதுரா – ஆக்ராவிற்கு மத்தியில் சிகி என்ற அழகிய கிராமத்தில், ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறக்கும் பொழுதே பார்வையற்றவராக பிறந்ததால், இவர் குடும்பத்தில் உள்ளோர் இவரை சரியாக கவனிக்கவில்லை. அதனால், மனம் உடைந்த சூர்தாசர் வீட்டின் திண்ணையிலே அமர்ந்திருப்பார். சூனியத்தைப் போல வெறிச்சோடி கிடந்தது இவரது மனம். இவருக்கு குடும்பத்தில் உள்ளோர் உணவோ அல்லது மற்ற தேவைகளோ என எதையுமே கொடுக்க மாட்டார்கள். வீட்டில் உள்ள அனைவரும் உணவை உண்ட பின்பு, திண்ணையில் இருக்கும் சூர்தாசருக்கு, மிஞ்சிய உணவைத்தான் கொடுப்பார்கள்.

தன் பிறப்பில் என்ன குறையோ? தான் செய்த கர்மவினையோ? என்று எண்ணிக்கொண்டு, அவர் அந்த திண்ணையிலே அமர்ந்து இருப்பார். அப்படி அவர் இருக்கின்ற பொழுது, தெருவினில் ஒரு கூட்டம் கூடி பஜனை செய்து கொண்டு வந்தனர். சூர்தாசருக்கு இது புதுமையாக இருந்தது. அந்த பஜனை சத்தம், சூர்தாசர் காதுகளுக்கு இனிமையும், மனதுக்கு சாந்தியும் தந்தது.

கொஞ்சம் காதைத் தீட்டி, எங்கே இருந்து இந்த பஜனை சத்தம் கேட்கிறது என்று கூர்ந்து கவனித்தார். தன் வீட்டிற்கு மேற்புறத்தில் இருந்து அந்த சத்தம் வந்துகொண்டிருந்தது என்பதை அறிந்துகொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை நெருங்கும் பொழுது சத்தம் அதிகமாகக் கேட்பதை உணர்ந்தார். திண்ணையில் இருந்து எழுந்து தட்டு தடுமாறி வெளியே, தெருவில் வந்து நின்றார். கண்ணனின் லீலைகளைப் பாடி பஜனை செய்துகொண்டு வந்தவர்கள், ஒவ்வொருவராக அல்லது கும்பல் கும்பலாக இவரைக் கடந்து சென்றனர். இனிய குரலில் பாடல்கள் பாடி கண்ணனின் இளமைப் பருவத்தை வருணித்து கூறிய விதம், மனம் உருகச் செய்தது. தேவகானத்தில் ஈடுபட்ட மக்கள் கூட்டம், பஜனை கூட்டத்தோடு பின் தொடர்ந்து சென்றனர்.

கண்ணன் புகழைப் பாடி சென்று கொண்டிருந்த ஒரு பஜனை கோஷ்டியில் இருந்த ஒருவரை அழைத்து, `ஐயா.. இங்கே கொஞ்சம் வாருங்கள். எனக்கு பார்வை கிடையாது அருகே வாருங்கள்’ என்று அழைத்தார். சூர்தாசர் அருகில் வந்தவர், `என்ன தம்பி என்ன வேணும்?’ என்று கேட்டார். `ஐயா! என் பெயர் சூர்தாசர். நான் பார்வையற்றவன். என்னால், நீங்கள் எடுத்துச் செல்லும் உருவத்தைக் காண முடியாது. ஆனால், நீங்கள் யாரைப்பற்றி புகழ்ந்து பாடிக்கொண்டு செல்கிறீர்கள் என்பதையும் நான் அறியேன். உங்கள் பாடல் இனிமையாக உள்ளது. யாரைப் பற்றி பாடுகிறீர்கள் கூறுங்கள்’ என்று கேட்டார். ஆஹா! என்ன அருமையான கேள்வி கேட்டீர்.

உலகையே படைத்து காக்கும், ஆலிலை மீது படுத்திருப்பான்,
புல்லாங்குழல் இசையால் உலகத்தையே மயங்க செய்பவன்,
பிருந்தாவன நாயகன், குழலூதும் கண்ணன்.
அவனின் சிரிப்பழகை பற்றி நாங்கள் பாடுகிறோம் என்று கூறினார்.

`எத்தனை இனிமையாக உள்ளான் என்பதை பற்றி எல்லாம் நீங்கள் கூறினீர்கள். ஆனால், அவன் எவ்வாறு இருப்பான்? என்று மட்டும் கூறவில்லையே’ என்று அடுத்த கேள்வியை கேட்டார். ஆஹா.. இதுவும் எவ்வளவு அழகான வினா?

கண்ணன் குழந்தை வடிவம் உடையவன்.

`என்ன கண்ணன் குழந்தையா’?
– என்று வியந்து கேட்டார் சூர்தாசர்.

`ஆமாம், குழந்தையேதான். குட்டி கிருஷ்ணன், குட்டி கண்ணன். தலைவாரி கொண்டையின் மீது மயிலிறகு எப்பொழுதும் அழகாக சூடிக்கொண்டிருப்பான். கழுத்தில் முத்தாரம். கைகளில் காப்பு. காதுகளில் வளையம் அணிந்திருப்பான். இதழ் குவித்து சிரிப்பான். அவனிடத்தில் எப்பொழுதும் புல்லாங்குழல் இருக்கும். அந்த குழலை எடுத்து ஊதினால், பசுக்கள் கூட்டம் அவனை சூழ்ந்துகொள்ளும். அருகே அவன் வயது ஒத்த பிள்ளைகளும், ஒருவரோடு ஒருவர் சேர்ந்து விளையாடுவார்கள். ஏதாவது ஒரு குறும்பை செய்துகொண்டே இருப்பான். கோபியர்கள் அவனை சூழ்ந்து கொண்டு, பாடல்களை இசைத்துக் கொண்டும், நடனம் ஆடிக்கொண்டும் இருப்பார்கள் என்று சூர்தாசர் கேட்ட கேள்விக்கு கடகடன்னு பதிலை விவரித்தார்.

அந்த கண்ணனுடைய அழகிய மேனியும், அழகிய ரூபமும் அவருடைய நெஞ்சில் மெல்லமெல்ல ஏறி அவர் நெஞ்சத்தில் குடிகொண்டது. அதன் பிறகு, அந்த குட்டிக் கண்ணனின் குறும்பு சிரிப்பினை நினைத்து மெதுவாக திண்ணையில் வந்து அமர்ந்துகொள்கிறார். சூர்தாசர் மெய் மறந்து போகிறார். அதே நேரத்தில், பஜனைக் காரர், `ஐயா சூர்தாசரே நான் விடைபெறுகிறேன்’ எனக்கூறி பஜனை கோஷ்டிகளோடு சேர்ந்து கொண்டு, கண்ணன் லீலைகளை மீண்டும் பாடிக் கொண்டே செல்கின்றார்.

கண்ணனின் லீலைகள், அவர் கண் முன்னே தோன்றியது. கண்ணன்கூட இருப்பது போன்ற பிரம்மை விரிவடைகிறது. ஒவ்வொரு நிகழ்வுகளாக, கண்ணன் ஓடுவது, நடப்பது, சிரிப்பது, உண்பது, தவழ்வது, நடைபயில்வது, கைகொட்டி சிரிப்பது போன்ற அழகிய கண்ணன் லீலைகள், அவர் கண்முன் விரிந்துகொண்டே இருக்கின்றது. அவர் வாழ்க்கையில், அடி எடுத்து வைத்த முதல் நிகழ்வு. வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கிறது. இந்த தருணமே ஆகும்.

தினமும், மனதில் கண்ணனின் செயல்களைக் கண்டு வாய்விட்டு சிரித்து, அவன் அழகை ரசித்து, எப்பொழுதும் கண்ணா… கண்ணா… கண்ணா.. என்று அவனை அழைத்து இருந்தான். அக்கம் பக்கத்தில் உள்ளோர் எல்லாம், `என்ன ஆச்சு இந்த சூர்தாசனுக்கு? பைத்தியம் பிடிச்சு போச்சா? எப்ப பார்த்தாலும் கண்ணா.. கண்ணா.. என்று சொல்கின்றான்’ என்று அவனை கேலி செய்ய தொடங்கினர்.

அதைப்பற்றி எதுவுமே சிந்தனையின்றி தன்னுடைய உள்ளம், ஆத்மா முழுவதும், உடம்பு எங்கும் கண்ணன் பரவி, அவன் கொஞ்சுவது போலவும், தன்னை கெஞ்சுவது போலவும் தோன்றியது. அவருக்கு பசி எடுக்கும் என்பதை அறிந்து, கண்ணன் சாப்பாடு ஊட்டுவது போலவும், தேவையானவற்றையெல்லாம் செய்து கொடுப்பது போலவும், பாவனையிலே லயத்திருந்ததால், வீட்டில் இருப்பவருக்கு இந்த செய்கையானது பிடிக்கவில்லை. இவனை என்ன செய்வது, ஏதோ பித்து பிடித்தவன் போல தெரிகின்றானே. வருவோர் போவோர் இவன் செயலால் காட்சிப் பொருளாக அல்லவா பார்க்கிறார்கள். அவமானமாக இருக்கிறது என்று நினைத்தார்கள். திடீர் என்று ஒரு நாள்;

“ஏன்டா! சூர்தாசா… எங்க மானத்தை வாங்குறதுக்குன்னே இந்த திண்ணையின் மேல உக்காந்துட்டு இருக்கியா?’’ என்று கத்தினான் பெரிய அண்ணன். அடுத்தவனோ, “சூர்தாசா..! உனக்கு கண்ணன் காட்சி தந்தா.. உன் மனசோட வச்சிக்க வேண்டியதுதானே. எதுக்காக இப்படி பேசி ஆர்ப்பாட்டம் பண்ற. எங்களுக்கு ரொம்ப அசிங்கமா இருக்குப்பா..’’ என்று குரல் கொடுத்தான்.

“ஏன்டா இப்படி எங்களை பாடாபடுத்துற. அப்படி என்னதான் கண்ணன் அள்ளி கொடுத்துட்டான்?’’ என்று சத்தமிட்டு வீட்டில் உள்ளவர்கள் கத்தினார்கள். அதைப்பற்றி, சூர்தாசர் கவலைப் படாமல் இருந்தார்.

“தியானமின்றி விழிப்புணர்வு இருக்கின்ற பொழுது, நான் என்னம்மா செய்துட்டேன். எதுக்குமா என்னை கோச்சிக்கிறீங்க? கண்ணனோடுதானே பேசிகிட்டு இருந்தேன். அவன் குட்டி பாப்பா இல்லையா! குட்டி கண்ணன்தானே! அவனுக்கு ஒன்னும் தெரியாது. நான்தானே சாப்பாடு ஊட்ட வேண்டும்’’ என்றெல்லாம் கண்ணனை பற்றி ரசித்து ருசித்து அனுபவித்து ஆனந்தத்தில் சூர்தாசர் பேசுகிறார். இதை கேட்டு கடும் கோபம் கொண்ட சூர்தாசரின் சொந்தங்கள், “நீ இனி திண்ணையில் அமரக்கூடாது. இந்த இடத்தை விட்டு போயிடு’’ என்று கூறினார்கள். வீட்டில் உள்ளோர் சூர்தாசை திட்டுவதை பிடிக்காமல் குட்டி கிருஷ்ணன், தாசரின் கையைப் பிடித்து இழுத்தான். இதுவரை, தன் உள்ளத்தில் ரசித்துக்கொண்டிருந்த சூர்தாசர், தற்போது, கிருஷ்ணனின் கை தொடும் உணர்வை பெற்றார். “வா.. வெளியே போகலாம்’’ என்று குட்டி கிருஷ்ணன் அழைத்தான்.

“அம்மா கண்ணனுக்கு, இந்த வீடும், திண்ணையும் பிடிக்கவில்லை. அதனால், நான் போறேன் நீங்க எல்லோரும் சந்தோஷமாக இருங்கள்’’ என்று கூறி மகிழ்ச்சியாகக் கிளம்பினார், சூர்தாசர். கண்ணன், ஒரு ஆலமரத்தின் அடியில் சூர்தாசரை அமரச் செய்தான். தானும் அமர்ந்தான். சூர்தாசர், கண்ணனுடைய லீலைகளை பாடத் தொடங்கினார்.

ஒவ்வொரு பாடலும் பாடப்பாட அந்த பாடலைக் கேட்டு அத்தெருவழியே சென்ற ஆண்களும், பெண்களும் பாடலைக் கேட்டு மெய்மறந்தனர். அவர்களின் மனம் நிறைந்தது. உடனே, அவர்கள் தங்களால் முடிந்த அளவில் காலை, மாலை, இரவு என்று சூர்தாசருக்கு தேவையான சாப்பாடு, மற்றும் அவருக்கு தேவையான வற்றை வாங்கிக் கொடுத்தார்கள். சூர்தாசர், தான் சாப்பிட்ட மீந்திருக்கும் உணவை நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு வைத்துவிடுவார். இப்படியாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்க, அந்த வழியாக துளசிதாசர் வந்தார்.

கண்ணை மூடிக் கொண்டு சூர்தாசரின் கண்ணனுடைய பாடல்களைக் கேட்க கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த கூட்டங்களைத் தள்ளிக் கொண்டு முன்னே சென்று பார்த்தார். அங்கே மரத்தின் கீழே சூர்தாசர், தனியாகப் பாடிக் கொண்டிருந்தார். அந்த பாடல் கேட்டு, அவருடன் இணைந்து கண்ணனின் பாடல்களை சேர்ந்தே பாடினர். பின்னர் சூர்தாசரும், துளசிதாசரும் நண்பர்கள் ஆயினர். அன்று முதல் கண்ணன் பாடல்களை பாடினார்கள். அதன் பின்பு, அவர்கள் அருகே இருக்கின்ற கிருஷ்ணன் கோயில்களுக்குச் சென்று, கிருஷ்ணனை வணங்கி வருவதை வழக்கமாக கொண்டார்கள்.

யானையைக் கண்டு கண்ணன் பயம்

சூர்தாசரும், துளசிதாசரும் கிருஷ்ணன் கோயில் சென்று திரும்பி வரும் போது, கிருஷ்ணனுடைய லீலைகளை பேசிக் கொண்டே வருவது வழக்கம். அப்படி ஒரு நாள், ஒருவரோடு ஒருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு நடந்து வந்தனர். துளசிதாசர், “மக்களை நாம் பக்தி வழியில் செல்லக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும். இப்பொழுது மக்களுக்கு இறை நம்பிக்கை குறைந்து வருகின்றது. சடங்குகள் மீதும் நம்பிக்கை பலம் குறைந்து வருகிறது. ஆகவே, அவர்களை பக்தி மார்க்கத்தில் அழைத்துச் செல்ல வேண்டும்.’’ என்று கூறினார். அதற்கு சூர்தாசர், “மக்கள் உள்ளத்தில் கண்ணனின் பெருமைகளை அறிந்துகொண்டால், பக்தி தானாகவே தோன்றிவிடும்’’ என்று பேசினார்.

அச்சமயம், தூரத்தில் மக்கள் அனைவரும் ஓடிக் கொண்டு இருந்தனர். அப்படி கூட்டமாக ஓடி வரும் ஒரு நபரை தடுத்து நிறுத்தினார், துளசிதாசர். “ஐயா! எதற்காக, நீங்கள் இப்படி தலைதெறிக்க ஓடுகிறீர்கள்? என்ன நடக்கிறது’’ என்று கேட்டார் துளசிதாசர்.“ ஐயா, உங்களுக்குச் செய்தி தெரியாதா? அங்கே ஒரு மதம் பிடித்த யானை, மக்கள் அனைவரையும் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது. அதனால், நாங்கள் எல்லோரும் உயிர்பிழைத்தால் போதும் என்று ஓடி வருகிறோம். நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்’’ என்று எச்சரித்ததுடன் “ஐயோ! பாவமே, இவருக்கு கண்கள் தெரியாதல்லவா? இவரை பத்திரமான பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்’’ என்றும்கூறி, மீண்டும் தன் ஓட்டத்தை ஓடத் தொடங்கினார்.

“யானையா அப்படி என்றால் என்ன?’’ என்று சூர்தாசர் கேட்கிறார். அதற்கு, “யானை விலங்கு களிலேயே மிகவும் பெரியது. அதற்கு கோபம் வந்தது என்றால் மனிதர்களை தன் தும்பிக்கையால் தூக்கி எறிந்து, காலால் அடித்து தூக்கி மிதித்து விடும்’’ என்று துளசிதாசர் கூறினார். “அதனால், மனிதர்கள் ஓடுகிறார்கள்’’ என்று கூறிவிட்டு, துளசிதாசர் கண்களை மூடி தியானம் செய்தார். சிறிது நேரம் கழித்து கண்ணைத் திறந்தார். அப்பொழுது, சூர்தாசரை காணவில்லை. எங்கே சென்றார் என்று தேடினார் துளசிதாசர். அப்பொழுது, அவருடைய பார்வையில் சற்று தூரத்தில் உள்ள இரண்டு மரங்களுக்கு இடையே தன்னை மறைத்துக்கொண்டு, கைகளை நடுங்க இதயத்தில் அப்படியே கைகளை வைத்து கொண்டு நடுநடுங்கினார்.

உடனே, துளசிதாசர் அவர் அருகே சென்று தோளைப் பற்றினார். “என்ன இது! கண்ணன் இவரின் உள்ளத்திலே இருக்கிறார் அல்லவா! அப்படி இருக்க, இவர் ஏன் பயந்து நடுங்குகின்றார்? என மனதுக்குள் நினைத்துக் கொண்டே.. அதனை வாய்விட்டு கேட்டும் விடுகிறார். “தாசரே! எதற்காக அச்சம். மரத்தின் இடையே மறைவது ஏன்’’? என்று கேட்கிறார் துளசிதாசர்.

“துளசிதாசரே! உங்கள் இதயத்தில் உள்ள கண்ணன் மிகப் பெரியவன். அவன் யானையை அடித்து உதைத்துவிடுவான். ஆனால், என் உள்ளத்தில் உள்ள கண்ணன் மிகச் சிறியவன். குழந்தை, அவனுக்கு இது போல் உள்ள பெரிய விலங்கு எல்லாம் பார்த்தால், பதறிவிடுவான் அல்லவா? அவனை நான் எப்படி சமாதானம் செய்வேன்? அதனால்தான், அவன் யானையை பார்க்காதவாறு என் இரண்டு கைகளால் இதயத்தை பொத்தி நான் பாதுகாக்கிறேன்’’ என்று கூறினார் சூர்தாசர். சூர்தாசர் கூறியதைக் கேட்டவுடன், துளசிதாசரின் கண்களில் கண்ணீர் பெருகியது. அப்படியே சூர்தாசரை மார்போடு அணைத்துக்கொண்டார்.

தொகுப்பு: பொன்முகரியன்

The post கண்ணற்ற சூர்தாசரின் உள்ளத்தில் கண்ணன் appeared first on Dinakaran.

Tags : Kannan ,Kunkum Anmigam ,Tulsidasara ,Surdasara ,Surdasar ,Mathura ,Agra… ,
× RELATED கோவில்பட்டி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி