×

ஆகஸ்ட் 15-ம் தேதி திட்டமிட்டபடி கீழ்பவானி கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் சு.முத்துசாமி!

சென்னை: கீழ்பவானி கால்வாயில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15-ம் தேதி கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகள் சேகரிப்பதற்காக 33 புதிய வாகனங்களை மண்டலம் வாரியாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அதிமுக ஆட்சியில் திட்டமிடல் செய்ய தவறிவிட்டனர்.

அதனை திமுக ஆட்சியில் ஆய்வு செய்து விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு திட்டம் தொடங்குவதற்கு முன்பாக அதில் விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறியுள்ளார். கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி நிச்சயம் தண்ணீர் திறக்கப்படும், திட்டவட்டமாக அதிகாரிகளுக்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும், அதற்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.

சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில், விவசாயிகள் இரண்டு அணியாக பிரிந்து உள்ள காரணத்தால் இருதரப்பையும் சமாதானப்படுத்தி பணிகளை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. அதனால் தொடர்ந்து பேசி வருகின்றோம். தற்போது சில இடங்களில் பணிகளை தடுத்தார்கள். அங்கு பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது. சில இடங்களில் புதிய கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது. பழைய கட்டுமானங்கள் செய்ய யாரும் தடுக்கவில்லை, இந்தப் பணிகளை வேகப்படுத்தி, கீழ்பவானி கால்வாயில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதற்கும் பணிகளை செய்து வருகிறோம்.

சென்னிமலை ஒன்றியத்தில் இரண்டு பஞ்சாயத்துகளில் சிப்காட் ஆலை கழிவுகளால் தண்ணீர் உபயோகப்படுத்த இயலாது என குடிநீர் வடிகால் வாரியம் பரிசோதனை செய்து தெரிவித்துள்ளது. அந்த பகுதிகளுக்கு முழுமையாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

The post ஆகஸ்ட் 15-ம் தேதி திட்டமிட்டபடி கீழ்பவானி கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் சு.முத்துசாமி! appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,Minister ,S.Muthusamy ,CHENNAI ,Kilibhavani Canal ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...