×

குறுவையில் அதிக மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி சிறந்தது

*வலங்கைமான் வேளாண் அதிகாரி விளக்கம்

வலங்கைமான் : குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி சிறந்தது என வலங்கைமான் வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை கடந்த 12ம் தேதியும் கல்லணை 16ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து வலங்கைமான் மற்றும் குடவாசல் தாலுகாக்களில் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருந்திய நெல் சாகுபடியில் ஒரு எக்டர் நடவு செய்ய 100 ச.மீ. நாற்றங்கால், அதாவது சுமார் 1000 நாற்று பாத்திகள் தேவைப்படும். ஒரு வாரத்திற்குப் பின்னர் நாற்று வளர்ந்து விட்ட நிலையில் வாய்க்காலில் நீர் நிரப்பும்போது, நீர் நாற்றின் அடிப்பகுதியில் நனைத்து தேவையான வளர் ச்சியைத் தரவல்லதாக அமையும். நன்கு சேற்றுழவு செய்யப்பட்டு, மிகவும் சீரான முறையில் நடவு வயல் சமன் செய்யப்பட வேண்டும். நீர் நிர்வாகமே இம்முறை நடவின் சிறப்ப அம்சம், அச்சிறப்பை அடைவதற்கு சமன் செய்யப்பட்ட நிலம் மிகவும் அவசியம்.

கயிற்றில் முடிச்சு ஒவ்வொரு 10 அங்குத்திற்கும் அடையாளம் வைத்து நடவு செய்யலாம் அல்லது சமன் செய்யப்பட்ட வயல் 10 அங்குலத்திற்கு கோடுகள் குறுக்காகவும், நெடுக்காகவும் ஏற்படுத்தி அதன்பின்னர் அக்கோடுகள் சந்திக்கும் இடங்களில் நடவு செய்து சரியான வரிசையை ஏற்படுத்தலாம். இவ்வகைக் கட்டங்கள் அமைக்க சிறிய எளிய கருவிகளும் பயன்படுத்தலாம். நாற்றுக்கள் பாத்திகளிலிருந்து பிரித்த 30 நிமிடங்களுக்குள் நடவு செய்யப்பட வேண்டும்.

நடவு செய்தவுடன் தொடர்ந்து மழை பெய்யக்கூடிய பகுதிகளில் பயிரை நிலை நிறுத்த சிரமங்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இளங்கதிர் உருவானதிற்குப்பின் 2 அங்குலம் அளவிற்கு நீர் பாய்ச்சி எட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர் கட்டிடவேண்டும். நீர் கட்டி மறைந்து பின் நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். நடவு வரிசையில் அமைக்கப்பட்டதால் களைகளை உருளைக் களை எடுப்பான் கொண்டு மண்ணினுள் அழுத்தி விடுதல் வேண்டும். உருளைக் களை எடுப்பானை முன்னும் பின்னுமாய் அசைத்து களை எடுப்பானை உருட்டி களையைக்களைவதுடன் மண்ணினுள் காற்று புகுமாறு உருட்டுவது பயிரின் வேரிற்கு நல்லது. இவ்வாறு களை எடுப்பது நட்ட 10 நாட்களிலேயே ஆரம்பிக்பப்படலாம்.

10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் உருளைக் களை எடுப்பானைப் பயன்படுத்தி பலன் பெறலாம். பயிர்களுக்கு இடையே வேரிற்கு அருகில் உள்ள களைகளைக் களைய கைக்களை எடுப்பதும் அவசியமாகின்றது.நட்டதிலிருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை களைக்கருவியை குறுக்கும் நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும். நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் திருவாரூர் தேரோட என்ற பழமொழி வாயிலாக நெல் பயிரிடும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளனர். இன்று அனைவராலும் போற்றப்படும் செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பமானது பலவகையில் விவசாயிகளுக்கு நல்ல மகசூலை அளித்து வருகிறது.

நெல் நடவு செய்ய குறைந்த விதையளவே போதும். 18 நாள் இளவயது நாற்றுகளை தேர்வு செய்து நடவு செய்யலாம்.ஒற்றை நாற்றுகளாக அதிக இடைவெளி விட்டு நடவு செய்யலாம். களைக்கருவி மூலம் எளிமையாகக் களைகளை நிர்வாகம் செய்யலாம். காய்ச்சல்-பாய்ச்சல் முறையில் நீர் பாசனம் செய்தால் மட்டுமே போதும். அதிக நீர் தேவையில்லை. இயற்கை உரங்களை பயன்படுத்தினால் போதும். எளிய முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தலாம். ரசாயன முறையை காட்டிலும் இதில் அதிக மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post குறுவையில் அதிக மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி சிறந்தது appeared first on Dinakaran.

Tags : Kurvai ,Valangaiman ,
× RELATED முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் துவக்கம்