×

தொரவளூர் ஏரிக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

விருத்தாசலம், ஜூலை 7: விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான 164.30 ஹெக்டர் பரப்பளவு ஏரியில், 4 மதகு அமைக்கப்பட்டு, 1913 மீட்டரில் ஏரிக்ரை அமைந்துள்ளது. இதன்‌ கரையில் 10 கூரை வீடுகளும், 29 சீட்டு வீடுகள் என மொத்தம் 39 வீடுகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து 40 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த 2019 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில், அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு வருவாய் துறை மூலம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் குடியிருப்பு வாசிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

இந்நிலையில் நேற்று நீர்வளத்துறை அதிகாரிகள் அருணகிரி, எத்திராஜீலு, வெங்கடேசன் ஆகியோர் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றினர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் ஏரிக்கரையில் குடியிருக்கும் 39 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்கிய பின்னரே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதில் வருவாய் துறை மூலம் முதல் கட்டமாக 7 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாகவும், மேலும் தகுதியுள்ள நபர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் மாற்று இடம் வழங்குவதாகவும் உறுதியளித்தனர். இதன் பின்னர் ஏரிக்கரையில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post தொரவளூர் ஏரிக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Lake Thoravalur ,Vrudhasalam ,Thoravalur ,Thoravalam ,Thoravalur Lake ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருள் விற்ற கடைக்கு சீல்