×

கேளம்பாக்கம் அருகே பரபரப்பு பீர்பாட்டிலால் குத்தி பிரபல ரவுடி கொலை

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே பீர்பாட்டிலால் குத்தி பிரபல ரவுடியை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கம் அருகே பொன்மார் காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் கிடப்பதாக, தாழம்பூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாம்பாக்கம் – மேடவாக்கம் செல்லும் சாலையில் பொன்மார் கிராமத்தில் தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் வனப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு கழுத்து மற்றும் வயிறு ஆகிய இடங்களில் பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த வாலிபர், மதுரப்பாக்கம் மந்தைவெளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவி மகன் லோகநாதன் (எ) பிரவீன் (20) எனவும், இவர் பணத்திற்காக அகரம்தென் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் எஸ்தர் (51), என்ற பெண்ணை கழுத்தில் காலை வைத்து அழுத்தி கொலை செய்த வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் 19ம்தேதி சேலையூர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் உள்ள கொலை குற்றவாளி என்பதும், அவன்மீது பல்வேறு அடிதடி, தகராறு உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், பிரவீன் இறந்து கிடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா அல்லது கொலை செய்ய திட்டமிட்டு மதுகுடிக்க அழைத்து வந்து கொலை செய்தார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேளம்பாக்கம் அருகே பரபரப்பு பீர்பாட்டிலால் குத்தி பிரபல ரவுடி கொலை appeared first on Dinakaran.

Tags : Kelambakkam ,Tirupporur ,Bustle ,
× RELATED கேளம்பாக்கத்தில் தனியார் பள்ளி சீல்...