×

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு கவர்னர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களுக்கு பல மாதங்களாக ஒப்புதல் அளிக்காததால் கவர்னர் ஆரிப் முகம்மது கான் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது. கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டத் திருத்த மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா உள்பட 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை கவர்னர் ஆரிப் முகம்மது கானின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அதில் கையெழுத்து போட முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். கேரள அரசு பலமுறை வலியுறுத்தியும், 4 அமைச்சர்கள் நேரடியாக சென்று விளக்கம் அளித்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுத்துவிட்டார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல என்று முதல்வர் பினராயி விஜயன் பலமுறை வெளிப்படையாகவே கூறினார்.

இந்நிலையில் கவர்னரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட கேரள அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அட்வகேட் ஜெனரலுடன் கேரள சட்டத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் படி விரைவில் கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட கேரள அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தெலங்கானா அரசு அம்மாநில கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

The post மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு கவர்னர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கேரள அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Governor ,Arif Mohammad Khan ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...