×

வாரணாசி வரும் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க போராட்டம் கங்கா ஆரத்தியை பார்க்க இயக்கப்படும் சிறு படகுகளின் ஊழியர்கள் ஸ்டிரைக்: இயந்திர படகுகளை அரசு இயக்கக் கூடாது என வலியுறுத்தல்

வாரணாசி: வாரணாசிக்கு இன்று வரும் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கங்கா ஆரத்தியை பார்க்க இயக்கப்படும் சிறியவகை படகு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உ.பி அரசு சார்பில் இயக்கப்படும் இயந்திர படகுகளை இயக்க கூடாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காசி சென்று கங்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கிவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ ஆகும். இந்த பிரமாண்ட பூஜை மாலை 6 மணி முதல் 8 மணி வரை கங்கைக் கரையில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

பல சினிமாக்களில் இந்த கங்கா ஆரத்தியை பார்த்திருந்தாலும் நேரில் சென்று அந்த கங்கா ஆரத்தியில் பங்கு கொள்வது மிக சிறப்பு. வெள்ளை ஆடை அணிந்த 10 பூசாரிகளால் இந்த பூஜை செய்யப்படுகிறது. கங்கை நதிக்கு கற்பூர ஆரத்தி பிரமாண்டமாக காட்டுவதுதான் இதன் சிறப்பு. இந்த பூஜையைக் காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுகிறார்கள். இந்த பிரமாண்ட கங்கா ஆரத்தியை கங்கை நதிக்குள் படகில் சென்றும் பார்க்கலாம். இதற்காக கங்கை நதியில் பக்தர்களை அழைத்து செல்வதற்காக சுமார் இரண்டாயிரம் சிறிய வகை படகுகள் இயக்கப்படுகிறது.

ஒரு படகில் 10 முதல் 20 பேர் பயணம் செய்யலாம். இவர்களை அழைத்து செல்வதற்காக ஒவ்வொரு படகிலும் 4 ஊழியர்கள் இருப்பார்கள். இந்த படகில் பயணம் செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.100 வசூலிக்கிறார்கள். பக்தர்களை கங்கை நதிக்குள் அழைத்து சென்று கங்கா ஆரத்தியை பார்க்க செய்வார்கள். பக்தர்கள் பிரமிப்படையும் வகையில் இந்த பயணம் இருக்கும். இந்நிலையில், அரசு சார்பில் பெரிய வகையிலான 3 இயந்திர படகுகளும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இதன் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாநில அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வகை இயந்திர படகுகளை அதிகரித்தால் சிறிய வகை படகுகள் பாதிக்கப்படும்.

அதில் பணிபுரியும் ஊழியர்கள் 8000 பேரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பெரிய வகையிலான இயந்திர படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என்று அவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்துக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வாரணாசியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

எனவே, கங்கை நதியில் இயக்கப்படும் பெரிய வகை இயந்திர படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்றும், இன்றும் கங்கை நதியில் இயக்கப்படும் சிறிய வகை படகு வைத்திருப்பவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறிய வகை படகுகளில் செல்ல முடியாமல் பக்தர்கள் பலர் கங்கை நதிக்கரையில் நின்றவாறு கங்கா ஆரத்தியை நேற்று பார்த்தனர்.

The post வாரணாசி வரும் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க போராட்டம் கங்கா ஆரத்தியை பார்க்க இயக்கப்படும் சிறு படகுகளின் ஊழியர்கள் ஸ்டிரைக்: இயந்திர படகுகளை அரசு இயக்கக் கூடாது என வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Varanasi ,Ganga ,Ganga Aarti ,Ganga Aarti Strike ,Dinakaran ,
× RELATED வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து...