×

தேனி தொகுதி அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை: ‘‘தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் ஹமீது, மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதாகிருஷ்ணன் ஆகியோர், கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 வாக்குகளை பெற்று, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை விட ஓ.பி.ரவீந்திரநாத் 76,319 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளர் பி.மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகாரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தது. ஆனால், தேனி தொகுதியின் தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளிவைக்கவில்லை. எனவே, இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. மிலானி தரப்பில் வழக்கறிஞர் வி.அருண் ஆஜராகி வாதிடும்போது, ‘‘தேனி நாடாளுமன்ற தேர்தலின்போது ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில், தான் வாணி பேப்ரிக்ஸ் நிறுவன இயக்குநர் மற்றும் பங்குதாரர் என்பதை மறைத்துள்ளார். வாக்குகளை பெறுவதற்காக ஏழை பெண் வாக்காளர்களுக்கு இரட்டை இலை சின்னம் பொறித்த பச்சை நிறத்திலான சேலைகளை கொடுத்துள்ளார். அவரது சகோதரர் மூலம் தென்றல் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து சேலைகளும் தலா ரூ.1000 ரொக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் இரவு 11 மணிக்கு வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டியில் பறக்கும்படை நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 48 லட்சம் கைப்பற்றப்பட்டது’’ என்று வாதிட்டார். தொடர்ந்து இந்த வழக்கில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளிடம் மனுதாரரின் வழக்கறிஞர் அருண் விசாரணை நடத்தினார். இந்நிலையில், இந்த தேர்தல் வழக்கை ஏற்கக்கூடாது என்று ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்தார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது.

இந்த வழக்கில் மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை ஓ.பி.ரவீந்திரநாத் குமாரிடம், நீதிபதி கேட்டிருந்தார். அதற்கு ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பு, ஆவணங்களை சமர்பிக்க தயாராக இருப்பதாகவும், ரவீந்திரநாத் குமாரின் விளக்கத்தை கேட்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தது. இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு அதற்கு அனுமதி அளித்தார்.

அதன்படி ஓ.பி.ரவீந்திரநாத் குமார், கடந்த வாரம் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது அவர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராம் கேட்ட கேள்விகளுக்கு, சாட்சி கூண்டில் ஏறி ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது வாக்குமூலத்தை அளித்தார். பின்னர் மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் வி.அருண் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதிலளித்தார். அதிகார துஷ்பிரயோகம், ஆவணங்களில் திருத்தம், சொத்துகள் முறையாக காட்டாதது, பணப்பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார். இந்த விசாரணை 3.30 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் பதிலளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 28ம் தேதி தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் நேற்று அளித்த தீர்ப்பு: தேர்தலின்போது ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துகளின் விவரம், வங்கி கடன், வைப்பு தொகை மூலமாக பெற்ற வட்டி விவரங்களை வேண்டுமென்றே தெரிவிக்கவில்லை. வாணி பேப்ரிக்ஸ் நிறுவனத்தில் அவருக்கு 15 ஆயிரம் பங்குகள் இருந்ததை அவர் வேட்பு மனுவில் மறைத்துள்ளார். அந்த பங்குகளை தனது சகோதரர் ஜெயபிரதீப்புக்கு மாற்றியதாக கூறியதிலும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. அவருக்கு விஜயானந்த் டெவலப்பர்ஸ் நிறுவனத்திலிருந்து வர வேண்டிய ரூ.3 கோடியே 17 லட்சத்து 49,280தை ரூ.36 லட்சத்து 58,450 என்று பார்ம்-26ல் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனு பரிசீலனையின்போது அறப்போர் இயக்கம் ஆட்சேபனை தெரிவித்தை தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தான் பங்குதாரராக உள்ள நிறுவனத்திலிருந்து வந்த லாபம் ஆகியவற்றையும் தெரிவிக்கவில்லை. வாக்குக்காக அவர் இரட்டை இலை சின்னம் அச்சிடப்பட்ட சேலைகளையும் பணத்தையும் வழங்கியது சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்துள்ளது. இதை ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மறுக்கவில்லை. இந்த செயலில் அவரது ஆதரவாளர் சவீதா அருண்பிரசாத்திற்கு தொடர்பு இருப்பதும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சவீதா அருண்பிரசாத் அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் மேலசொக்கநாதபுரத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவும் செய்துள்ளனர். குறுக்கு விசாரணையின்போது சவீதா அருண்பிரசாத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று ஓ.பி.ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.

அவருக்காக சவீதா அருண்பிரசாத் பணம் கொடுத்துள்ளார் என்பதை மனுதாரர் நிரூபிக்க தவறிவிட்டார். அதனால், லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று மனுதாரர் மிலானி கூறுவதை ஏற்க முடியாது. ஆனால், ஓ.பி.ரவீந்திரநாத் குமார், சொத்து விவரங்களையும், பண வரவுசெலவுகளையும் மறைத்து தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறானது. வேட்புமனுவில் உண்மை தகவல்கள் மறைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தல் வழக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏ.பி.ரவீந்திரநாத் குமார் ேதனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார் என்று கடந்த 2019 மே 23ம் தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.

* தமிழகத்தில் ஒரு எம்பிகூட அதிமுக சார்பில் இல்லை
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தன. தேனி தொகுதியில் மட்டும் அப்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார். தற்போது, உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ரவீந்திரநாத் எம்பி பதவியை இழந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் ஒரு அதிமுக வேட்பாளர் கூட வெற்றிபெறவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

* காலம் தாழ்த்தியும் நீதி வென்றுள்ளது ஈவிகேஎஸ் இளங்கோவன் வரவேற்பு
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில், அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்டு 2ம் இடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி தற்போதைய எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் நேற்று அளித்த பேட்டி: தேனி தொகுதி எம்பியாக ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நாட்டில் தர்மமும், நியாயமும் இன்னும் இருக்கிறது என்பதை காட்டும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தின் போது பல முறைகேடுகள் நடந்தன. முறைகேடுகளை எல்லாம் அப்போதைய தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் பல புகார்களாக கொடுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் கொடுத்த எந்த புகார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், முழுக்க முழுக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் தான் தேர்தலில் எனக்கு தோல்வியாக அமைந்தது. காலம் தாழ்த்தியும் தர்மமும், நீதியும் வென்றுள்ளது. வழக்கை தொடர்ந்தவருக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேனி தொகுதி அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : M. GP O.O. GP ,Rabindra Nath ,Chennai iCort ,Chennai ,O.K. GP ,Rabindranath Kumar ,Chennai High Court ,Honey Module ,Rabindranath ,Chennai iCourt ,Dinakaran ,
× RELATED சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையை...