×

அதிக வட்டி ஆசைகாட்டி ரூ.5,900 கோடி மோசடி ஐஎப்எஸ் உரிமையாளரின் உறவினர் முகவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: காஞ்சிபுரம், வேலூர், காட்பாடி, நெமிலியில் பரபரப்பு

வேலூர்: அதிக வட்டி ஆசைகாட்டி ரூ.5,900 கோடி மோசடி புகாரின்பேரில் வேலூர், காட்பாடி, நெமிலியில் உள்ள ஐஎப்எஸ் உரிமையாளரின் உறவினர், முகவர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக கொண்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ‘இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்’ (ஐஎப்எஸ்) என்ற நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சென்னை, காஞ்சிபுரம் உள்பட தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கிளைகள் இருந்தன.

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் தரப்படும் என்று ஆசை வார்த்தைகூறி பலரிடம் பணம் வசூலித்தனர். சொன்னபடி வட்டி கொடுத்ததால் பலர் போட்டிபோட்டு தங்களது உடமைகளை விற்றும் கூட முதலீடு செய்தனர். இதனால் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் ரூ.5,900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளனர். பின்னர் வசூலித்த பணத்தை சுருட்டிக் கொண்டு உரிமையாளர்கள் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பகுதியில் உள்ள ஐஎப்எஸ் நிறுவன இயக்குநர் ஜனார்தனனின் தாத்தா பக்தவாசலம் வீடு, வேலப்பாடியில் உள்ள உறவினர் நடராஜன் வீடு, காட்பாடி அடுத்த செங்குட்டையில் ஜனார்த்தனனின் மாமனார் சந்திரசேகர் வீட்டிலும் டெல்லி மற்றும் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையில் சிக்கிய ஆவணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வதாகவும் கூறப்படுகிறது. பிற்பகல் 2 மணியளவில் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் ரெய்டு நிறைவு பெற்றது. இதையடுத்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றனர். வேலப்பாடி மற்றும் காட்பாடியில் தொடர்ந்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் நேற்று காலை 8 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அசநெல்லிக்குப்பத்தில் உள்ள முகவர் குமாரராஜா (38) என்பவரது வீட்டுக்கு சென்னை அமலாக்கத்துறையை சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் வந்து சோதனை செய்து வருகின்றனர். மேலும் அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியில் ஐஎப்எஸ் நிதி நிறுவனத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் கமலக்கண்ணன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் டெம்பிள் சிட்டி பகுதியில் வசித்து வரும் இயக்குநர் மற்றும் முகவருமான சுரேஷ் என்பவர் வீட்டிலும் ஆறுக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை சோதனை என்று கேள்விப்பட்டவுடன் சுரேஷ் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனால், சுரேஷின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

* பாஜ நிர்வாகிகள் உள்ள மோசடி நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்படுமா?
அதிக வட்டி ஆசைகாட்டி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று மோசடி செய்த பல்வேறு நிறுவனங்களில் பாஜ நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளது. அந்த வகையில் ஆருத்ரா நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பாஜ நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுதீஷ் ரூ.12.5 கோடி பெற்று குற்றவாளிகளை காப்பாற்றுவதாக மோசடி செய்துள்ளதும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிறுவனத்தில் பாஜ நிர்வாகியான அலெக்சுக்கும் பங்கு உள்ளது.இதேபோல பாஜ நிர்வாகி வீரசக்தி பங்கு வகிக்கும் நியோமேக்ஸ் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளது. பாஜ பிரமுகர் ராஜா பங்குதாரராக உள்ள எல்பின் நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்களில் எல்லாம் இதுவரை அமலாக்கத்துறை ரெய்டு நடத்தவில்லை. இவற்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி உண்மை குற்றவாளிகளை அம்பலப்படுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post அதிக வட்டி ஆசைகாட்டி ரூ.5,900 கோடி மோசடி ஐஎப்எஸ் உரிமையாளரின் உறவினர் முகவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: காஞ்சிபுரம், வேலூர், காட்பாடி, நெமிலியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Enforcement department ,IFS ,Pandemonium ,Kanchipuram, ,Vellore ,Katpadi ,Nemili ,Vellore, ,Gadpadi ,Enforcement ,Dinakaran ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...