×

கேரளாவில் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழைக்கு இதுவரை 10 பேர் பலி.! 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழைக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பம்பை, அச்சன்கோவில், மணிமலை, மீனச்சில், பெரியாறு உள்பட பெரும்பாலான ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

பல முக்கிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் கடும் சேதம் ஏற்பட்டு உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கேரளாவில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழையால் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். மழைக்கு நேற்று 2 பேர் பலியானார்கள். இந்தநிலையில் தற்போது பெய்து வரும் கனமழை மேலும் 3 நாள் தொடரும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஆகவே இன்று இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

தென் மாவட்டங்களை விட திருச்சூர், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு உள்பட வட மாவட்டங்களில் இன்றும் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று திருச்சூர், எர்ணாகுளம், கண்ணூர் உள்பட 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இன்று நடைபெற இருந்த கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. மணிக்கு 55 கிமீக்கு மேல் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

The post கேரளாவில் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழைக்கு இதுவரை 10 பேர் பலி.! 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Meteorological Centre ,Kerala ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது