×

ஏற்றம் தரும் எருமை வளர்ப்பு : மாதம் ரூ.1 லட்சம் வருமானம்

விவசாயிகளை பயிர்கள் கைவிட்டாலும், அவர்கள் வளர்க்கும் கால் நடைகள் ஒருபோதும் கைவிடாது. இதனால்தான் பல விவசாயிகள் வேளாண் தொழிலோடு துணைத்தொழிலாக கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் மட்டுமில்லை. நிலம் இல்லா சாமானியர்கள் கூட கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் எருமை மாடு வளர்ப்பில் ஈடுபட்டு, அசத்தலான வெற்றியை ஈட்டியிருக்கிறார். தேநீர்க்கடை நடத்தி வரும் சுப்ரமணியன், எருமை மாடுகள் கொடுத்த வருமானத்தின் மூலம் ஒரு அழகான வீடு கட்டியதுடன், 8 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் பார்த்து வருகிறார். அவரைச் சந்திக்க சென்றபோது, தனது தேநீர்க்கடையில் தேநீர் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அருகில் சென்று பேச்சுக்கொடுத்தோம்…

‘‘எனக்கு தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பக்கத்துல இருக்க செம்மனங்கோட்டைதான் சொந்த ஊரு. 35 வருடத்திற்கு முன்னாடி வாழ்க்கையில முன்னேறணும்ங்கிற முயற்சியோட எருமை மாடு வளர்க்க முடிவு செஞ்சேன். 83ம் வருசம் ஒரு எருமை மாடு வாங்கினேன். ஒத்த எருமை மாடு இன்னைக்கு 26 எருமை மாடுகளா மாறி இருக்கு. நான் படிச்சது என்னவோ மூணாவதுதான். இதுல கிடைச்ச வருமானத்தைக் கொண்டுதான் என்னோட பசங்கள படிக்க வைத்தேன். என்னோட வளர்ச்சிக்கு அஸ்திவாரமே என் மனைவிங்களும் எங்க குடும்பமும்தான். எருமை மாடுங்களை பராமரிக்கிறது, மேய்க்கிறது, பால் கறக்கிறதுன்னு அத்தனையும் நாங்களே பார்த்துக்கிறோம். மாடுகளை சுத்தமா குளிப்பாட்டி மேய்ச்சலுக்கு அழைச்சிட்டு போவோம். 1985ம் வருசம் முரா வகையை சேர்ந்த எருமை மாட்டை வாங்கினேன். அப்போது இருந்து இப்போ வரைக்கும் வேற எந்த மாட்டையும் வாங்கவே இல்லைங்க. அந்த எருமை மாடு போட்ட கன்று குட்டிங்கதான். அப்படியே அடுத்தது, அடுத்ததுன்னு இப்போ 26 மாடு இருக்கு. காளைக்கன்று போட்டா கோயிலுக்கு கொடுத்திடுவேன். விற்க மாட்டேன். அப்படி நிறைய காளைக் கன்றுகளை கோயிலுக்கு விட்டு இருக்கேன். எருமை வளர்த்து அதுல கிடைச்ச வருமானத்தை வைச்சுதான் இப்போ இருக்கிற வீடு, 8 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன்.

எருமை மாடுகளை வயல்வெளியில மேய்ச்சலுக்கு விடுவோம். அதுமட்டுமில்லாமல் புல் அறுத்துக்கிட்டு வந்து போடுவோம். நெல் சாகுபடிக்கு பின்னாடி வைக்கோல். இதுதாங்க எங்க எருமை மாடுகளுக்கு உணவு. வேற எந்த செலவுமே எனக்கு கிடையாது. மழை பெய்யல, புல் இல்லன்னா மட்டுமே தீவனம் கொடுப்போம். மற்றபடி எந்த விதத்திலேயும் செலவில்லை. ஆனா மாடுகளை கவனமாக பராமரிக்கணும். எருமை மாடுகள் வளர்ப்பு கஷ்ட மான விஷயமாக இருக்கலாம். ஆனா இஷ்டப்பட்டு பார்த்துக்கிட்டா வருமானம் கொட்டும்’’ என்று தொடர்ந்து பேசிய அவர்,எங்க டீக்கடைக்கு டீக்கு போக மீதி பால் இருந்தா தயிர் ஆக்கிடுவோம். அதுவும் விற்பனையாகிடும். அதனால கூடுதல் வருமானம்தான். கோமாரி நோய் தாக்குதல் வந்தப்ப கூட என் மாடுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காலை, மாலை மாடுகளை கட்டிப் போடுற இடத்தை சுத்தம் செய்துடுவோம். எல்லா வேலைகளையும் நானும் என் மகன், மகள் செய்யறதுனால லாபம் முழுக்க எங்களுக்குத்தான். எருமை மாடுகளை அதிகளவில் உற்பத்தி செய்யணும்கிறதுதான் விருப்பம். அதுக்குதான் எருமைப் பாலினை விற்காமல் கடைக்கு மட்டும் வச்சுக்கிறேன். அதிகளவில் கன்றுக் குட்டிங்க ஊட்ட விட்டுவிடுவோம். இதனால் கன்றுக் குட்டிகள் நல்ல ஊட்டமாக வளர்ந்து அடுத்தடுத்து குட்டி போடுது. இது லாபம்தானே!

எருமை மாட்டுச் சாணத்தை சேர்த்து வைத்திருப்போம். ஒரத்தநாடு பகுதிகளை சுற்றி இருக்க விவசாயிங்க எங்களிடத்தில் இருந்து எருமை மாட்டுச் சாணத்தை வாங்கிச் செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இதை மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்கிறேன். ஒரு டிப்பர் ரூ.3 ஆயிரத்துல இருந்து ரூ.4 ஆயிரத்துக்கு விலை போகும். இதுவும் ஒரு வருமானம். இப்போ எருமை மாட்டை வளர்க்க தயங்குறாங்க. காரணம் பசு மாடு வளர்ப்பை விட எருமை மாடு வளர்ப்பு மிகவும் கடினம் என்பதால்தாங்க. பசுமாட்டுப் பாலை விட எருமைப்பால் 10 ரூபாய் அதிக விலைக்குப் போகும். கஷ்டத்தை பார்க்காமல் வளர்த்தால் அதிக லாபம் பெறலாம். இன்னைக்கு இந்தளவுக்கு மாசத்துக்கு சராசரியா ரூ.80 ஆயிரத்துக்கு மேல வருமானம் பார்க்கிற அளவுக்கு நான் உயர்ந்திருக்கேன்னா அதுக்கு என் குழந்தைகளைப்போல வளர்த்துகிட்டு இருக்கிற இந்த எருமை மாடுகள்தான். எருமை மாடு வளர்ப்பில் ஈடுபடும்போது சகிப்புத்தன்மை அதிக அளவில் இருக்க வேண்டும். மாடுகளுக்கு தீவனம் அதிகமாக தராமல் வயல்வெளிகளில் மேய்ப்பதே சிறந்ததாகும். மேலும் மாடுகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றினை முன்பே அறிந்து செயல்பட வேண்டும். வயிற்றுப்போக்கு, கோமாரி, எருமை அம்மை போன்றவற்றில் இருந்து முன்கூட்டியே பாதுகாக்கலாம். எருமைகளைப் பிற மாடுகளைப் போல் கட்டிவைத்து வளர்ப்பது சரியானதல்ல. அவற்றை அடைத்து வைத்து, எவ்வளவு சத்தான தீவனத்தை அளித்தாலும், குறைவாகவே பால் கறக்கும். மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றால் மட்டுமே, எதிர்பார்க்கும் அளவுக்குப் பால் கிடைக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இப்போ 26 எருமை மாடுகள் இருக்கு. 7 மாடுகள் மட்டும் கறவையில இருக்கும். ஒரு நாளைக்கு 35 லிட்டர் பால் கறக்குதுங்க. ஒட்ட கறக்கவே மாட்டோம். கன்றுக்குட்டிங்களுக்கு அதிக பால் குடிக்க விட்டு விடுவோம். நாங்க எப்பவும் பாலை வெளியில விக்கிறது கிடையாது. இந்த பால்தான் எங்க டீக்கடைக்கு, வீட்டு உபயோகத்துக்கு வைச்சுக்கிட்டு இருக்கோம். சராசரியா டீக்கடையில ரூ.4000 ஆயிரத்துக்கு மேல வருமானம் வருது. வேலையாள் கிடையாதுங்க. நான் டீக்கடையில இருந்து பார்த்துகிறேன். அதனால செலவெல்லாம் போக மாதத்திற்கு 1 லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் வருது’’ என்கிறார்.சுப்ரமணியத்தை தொடர்ந்து அவரது மகன் மற்றும் மகள்கள் நம்மிடம் பேசத் துவங்கினர்.‘‘எங்க அப்பா, அம்மா படிக்கலைன்னாலும் எங்களை நல்லா படிக்க வச்சாங்க. கஷ்டப்பட்டு உழைச்சாங்க. இப்பவும் உழைச்சிக்கிட்டு இருக்காங்க. எருமைகளை மேய்ச்சலுக்கு அழைச்சுக்கிட்டு போறது நாங்கதான். இதை ரொம்ப விருப்பப்பட்டே செய்யறோம். ஐடிஐ, முதுநிலை பட்டதாரிகளாக இருந்தாலும் எங்க குடும்பத்திற்கு தானே உழைக்கிறோம். இவங்க (எருமைகள்) கொடுத்த பாலில் வைத்த டீக்கடை வருமானம்தானே நாங்க இவ்வளவு படிக்க காரணம். இனிமே யாரையும் படிக்கலனா எருமை மேய்க்கத்தான் லாயக்கு என்று திட்டாதீங்க. ஏன்னா அதுலதான் வருமானம் அதிகம்’’ என்று தங்களின் எருமைச்செல்வங்களைக் காண்பித்து புன்னகைக்கின்றனர்.
தொடர்புக்கு:
சுப்ரமணியன்:70940 88763

The post ஏற்றம் தரும் எருமை வளர்ப்பு : மாதம் ரூ.1 லட்சம் வருமானம் appeared first on Dinakaran.

Tags : Riding ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு