×

தேனீ வளர்ப்பால் தென்னை செழிக்குது.. வழிமுறை சொல்கிறார் வைத்தீஸ்வரன்

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வறட்சி மாவட்டங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது தர்மபுரி. இங்குள்ள மக்களின் உழைப்பும், நம்பிக்கையோடு அவர்கள் முன்னெடுக்கும் புதிய முயற்சிகளும் வளர்ச்சிப்பாதையில் மாவட்டத்தை கொண்டு செல்கிறது. இந்த வகையில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தென்னை, வாழை, எலுமிச்சை என மூன்றடுக்குச் சாகுபடி செய்துள்ள விவசாயி, தேன் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளது வேளாண் ஆர்வலர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தொம்பரகாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வைத்தீஸ்வரன் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை மரங்களும், ஊடு பயிர்களாக வாழை மற்றும் எலுமிச்சை மரங்களையும் பயிர் செய்திருக்கிறார். இந்த பயிர்களுக்கு மத்தியில் தேன்பெட்டிகள் வைத்து தேன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த மூன்றடுக்கு விவசாய சாகுபடிக்கு தேன் உற்பத்தி என்பது மிகச்சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்குகிறது எனக் கூறும் வைத்தீஸ்வரன் சில நுட்பமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘இங்குள்ள தென்னை மரங்களில் குருத்துகளை வண்டுகள் சேதப்படுத்தியது. இதனால் இளநீர் மகசூல் பாதித்தது. இப்படிப்பட்ட வண்டுகளை கட்டுப்படுத்தவும், அயல் மகரந்த ேசர்க்கைக்கும் தேனீக்கள் மிகவும் அவசியம் என்று வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தினர். இதுவே தேனீ வளர்ப்புக்கு வழிவகுத்தது. எனக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஒரு ஏக்கரில் 110 தென்னை மரங்கள் நடவு செய்துள்ளேன். தென்னைக்கு ஊடு பயிராக
200 வாழை மரங்கள் வளர்த்துவருகிறேன். இளநீருக்காக மட்டும் 10 ரகங்களில் தென்னைகளை வளர்த்து வருகிறேன். இதில் காய் பிடிக்கும்போது வண்டுகள் குருத்துகளை கடித்துவிடுகிறது. தென்னையின் அபிவிருத்திக்காக தேனீ வளர்க்கலாம் என்று நண்பர்கள் கூறினர். அவர்களது யோசனையின் பேரில் நான் தேனீ வளர்க்க ஆரம்பித்தேன். இரண்டரை வருடத்திற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு சென்று 20 தேனீ பெட்டிகள் மற்றும் தேனீக்களை வாங்கி வந்தேன். தேனீ வளர்க்க ஆரம்பித்த பின்னர் தென்னையில் இளநீர் காய்கள் பிடிக்க துவங்கியது. தேனீ பெட்டி வைப்பதற்கு முன்பு இளநீர் காய்களே கிடைக்காது என்பதும் உண்மை.

தேனீ வளர்ப்பை பொறுத்தவரை முதல் முதலாக வளர்க்கும்போது, முதல் 6 மாதத்திற்கு தேன் எடுக்க முடியாது. அதேபோல் மழைக்காலங்களில் தேன் கிடைக்காது. தேன் பெட்டியில் இரு அறைகள் உள்ளன. கீழ் அறையில் மகரந்த சேர்க்கைக்காக தேன் இருக்கும். அதை நாம் எடுக்கக் கூடாது. மேலே இருக்கும் பெட்டியில் வைத்திருக்கும் தேனை மட்டுமே எடுக்கவேண்டும். நல்லம்பள்ளி தோட்டக்கலைத் துறையினர் நான் தேனீ வளர்ப்பதை அறிந்து என்னை ஊக்கப்படுத்தினர். எனக்கு 50 சதவீத மானியத்தில் 10 தேன் பெட்டிகளும், ஒரு தேன் பிழியும் இயந்திரமும் வழங்கினர்.இப்போது நான் தினமும் தர்மபுரி டவுனை ஒட்டிய ஒட்டப்பட்டி உழவர் சந்தையில் எலுமிச்சை, வாழை இலை, வாழைப்பழம், இளநீர், தேன் போன்றவற்றை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறேன். விவசாயியான நானே வியாபாரியாக மாறி குறைந்த விலையில் மக்களுக்கு தரமான கலப்படமற்ற தேன் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்கிறேன். இது மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. எனது வேளாண் யுத்திகள் குறித்து விவசாயிகளும், பொதுமக்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் கேட்டறிந்து வருகின்றனர். ஆர்வமுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கி விவசாயத்தின் பக்கம் திரும்புவதற்கு ஊக்கமளித்து வருகிறேன். தினமும் வாழை இலைகள் அறுத்து உழவர் சந்தையில் விற்பதன் மூலம் ₹500 கிடைக்கிறது. வாழைத்தார் விற்பனையில் ₹500 கிடைக்கிறது. தினமும் 10 முதல் 20 இளநீரை உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன். ஒரு இளநீர் ₹20 வரை விற்பனையாகிறது. எனது தோட்டத்தில் 70 தேனீப் பெட்டிகள் உள்ளன. மாதம் ஒரு முறை மட்டுமே தேன் எடுக்கலாம். ஒரு பெட்டிக்கு அதிகபட்சமாக 3 கிலோ வரை ேதன் கிடைக்கும். எனக்கு ஒரு மாதத்திற்கு 200 கிலோ வரை தேன் கிடைக்கிறது. ஒரு கிலோ தேன் ₹800க்கு விற்பனை செய்கிறேன். கலப்படமற்ற தேன் விற்பதால் மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது’’ என்கிறார்.

தோட்டத்தில் செயல்விளக்கம்

தோட்டக்கலைத்துறை மூலம் தேனீ வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகளை அதிகாரிகள் தேர்வு செய்கின்றனர். இந்த விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் தேசிய தோட்டக்கலைத்துறை சார்பில் 50 சதவீத மானியத்தில் தேனீ வளர்ப்பதற்காக 10 தேனீப் பெட்டிகள் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ₹16 ஆயிரம். இதேபோல் ₹8 ஆயிரம் மதிப்பிலான தேன் பிழியும் கருவியும் வழங்கப்படுகிறது. இந்தவகையில் மொத்தம் ₹24 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மேலும் தேனீ வளர்க்கும் விவசாயிகளின் தோட்டத்திற்கே நேரில் சென்று பெட்டிகளை தோட்டத்தில் வைக்கும் முறை, தேன் எடுக்கும்போது கவச உடை அணிவதற்கான வழிகாட்டுதல், தேன் அடைகளை இயந்திரத்தில் பிழிவது, அதை சுத்தப்படுத்தும் முறை என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. உதவி தோட்டக்கலை அலுவலர் வெங்கடாஜலம், ஜெயகுமார், கார்த்திகேயன், வசந்த குமார் ஆகியோர் இதற்கான பயிற்சியை அளித்து வருகின்றனர்.

தொடர்புக்கு: வைத்தீஸ்வரன் – 90474 14153,
உதவி வேளாண்அலுவலர்: நல்லதம்பி – 94430 84223.

50 சதவீத மானியம்

தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் கீழ் அயல் மகரந்த சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக தேனீ வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. தேனீயில் 2 வகைகள் உள்ளன. இதில் நாம் இந்திய வகை தேனீக் களையே விவசாயிகளுக்கு வழங்குகிறோம். தொம்பரகாம்பட்டியை சேர்ந்த விவசாயி வைத்தீஸ்வரன் தேனீ வளர்ப்பதை அறிந்தோம். அவர் மூலம் தேனீ வளர்ப்பை பரவலாக்கலாம் என்ற அடிப்படையில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 10 தேனீப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிழியும் கருவியும் 50 சதவீத மானியத்தில் வழங்கினோம். இவர் மல்டி கிராப் கல்டிவேசன் என்ற அடிப்படையில் வாழை, தென்னை, எலுமிச்சை, ரோஜா ஆகியவற்றை விவசாயம் செய்து வருகிறார். இந்தச்சூழலில் இவர் வளர்க்கும் தேனீக்களால் அயல் மகரந்த சேர்க்கை அதிகரிக்கும். நல்லம்பள்ளி வட்டாரத்தில் மட்டும் 10 விவசாயிகளை தேர்வு செய்து தேனீப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. தேனீ வளர்க்கும் விவசாயிகளின் தோட்டத்தில் பயிர்களின் மகசூல் அதிகரித்துள்ளது. அனைத்து விவசாயிகளும் தேனீ வளர்க்கலாம். வரும் ஆண்டில் தேனீ வளர்ப்புக்கு 6 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேனீ வளர்ப்பு பெட்டி வழங்க உள்ளோம்,’’ என்கிறார் தோட்டக்கலை உதவி இயக்குனர் துரைராஜ்.

The post தேனீ வளர்ப்பால் தென்னை செழிக்குது.. வழிமுறை சொல்கிறார் வைத்தீஸ்வரன் appeared first on Dinakaran.

Tags : Vaitheeswaran ,Dharmapuri ,Tamil Nadu ,Vaideeswaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்