×

ஜவ்வாதுமலை கோடை விழாவில் ₹500 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்

*ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

போளூர் : திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை கோடை விழாவில் அனைத்துத்துறை சார்பில் ₹500 கோடிக்கு மேல் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பா.முருகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.ஜவ்வாதுமலை கோடை விழா ெகாரோனா ெதாற்று காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தாண்டு வரும் 18ம் தேதி 23ம் ஆண்டு கோடை விழா ஜமுனாமரத்தூர் அடுத்த அத்திப்பட்டு தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்கயுள்ளனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஜவ்வாதுமலை கோடை விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை ஜமுனாமரத்தூரில் நடந்தது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலெக்டர் பா.முருகேஷ் பேசியதாவது: கோடை விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்கயுள்ளதால் மிக சிறப்பாக, பிரம்மாண்ட முறையில் நடத்த வேண்டும் என ெபாதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே அனைத்துத்துறை அதிகாரிகளும் கண்காட்சி அரங்குகள் அமைத்தல், நலத்திட்ட உதவி வழங்குதல், புதிய கட்டிடங்கள் திறந்து வைத்தல், என அனைத்து வகையிலும் மிகச்சிறப்பாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வேளாண், தோட்டக்கலை, சமூக நலம், ஆதிதிராவிட நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ மற்றும் மகளிர் திட்டம் என அனைத்துத்துறைகள் சார்பாகவும் சுமார் 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ₹500 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கு அனைத்து வழி தடங்களிலிருந்தும் அரசு பஸ், தனியார் பஸ் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மலர் கண்காட்சி மிகச்சிறப்பாக அமைக்க வேண்டும். குறிப்பாக கலை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். கழிவறை வசதி, குடிநீர் வசதி, உணவு விடுதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்ய வேண்டும்.

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 18 மற்றும் 19ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே பள்ளி மாணவ, மாணவிகளை கலந்து கொள்ள செய்ய வேண்டும். மேலும் அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை, விழா நடைபெறும் நாட்களில் மூடிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள சுற்றுலா மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் விழா நடைபெறும் பள்ளி மைதானத்தையும் அதிகாரிகள் மற்றும் எம்பி, எம்எல்ஏவுடன் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் திருமால், வேளாண்மை இணை இயக்குனர் ஹரக்குமார், ஒன்றிய குழு தலைவர் எம்.ஜீவாமூர்த்தி, துணைத்தலைவர் செ.மகேஸ்வரி செல்வம், கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் அ.நடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கா.ரேணுகோபால், நா.பிரகாஷ், நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர்கள் பா.திருநாவுக்கரசு, வி.கோவிந்தசாமி, உதவி பொறியாளர் எம்.வெங்கடேசன் உட்பட ஏராளமான அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஜவ்வாதுமலை கோடை விழாவில் ₹500 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Javadumalai Summer Festival ,Thiruvannamalai District ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...