×

ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய மெட்டாவின் திரெட்ஸ்: இந்தியாவில் 2 மில்லியன் பேர் இணைந்துள்ளதாக தகவல்

வாஷிங்டன்: சமூக வலைதளமான ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் முதல் ட்விட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது. இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் அந்த தளத்தில் அதிரடி மாற்றங்களை முன்னெடுத்தார். ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, ப்ளூ டிக் கட்டண சந்தா, அண்மையில் ட்விட்டர் பயனர்கள் ட்வீட்களை பார்ப்பதற்கு புதிய வரம்பு ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டது. இது பயனர்களை விரக்தி அடைய செய்தது. அதே நேரத்தில் ட்விட்டருக்கு மாற்றாக தளங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். கூ, ஸ்பில், ப்ளூ ஸ்கை என பல மாற்றுகள் உள்ளன. ஆனால், முதல் முறையாக மெட்டா போன்ற பெரிய நிறுவனம் ட்விட்டருக்கு மாற்றை அறிவித்துள்ளது. மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பெர்க், த்ரெட்ஸ் முயற்சியை முன்னெடுத்தார்.

இந்த தளம் ட்விட்டரை போலவே முற்றிலும் டெக்ஸ்ட்களை அடிப்படையாக வைத்து இயங்கும் தளம் என தெரிகிறது. பயனர்கள் தங்கள் எண்ணங்களை டெக்ஸ்ட்களாக பகிரலாம். இந்த தளத்தை பயனர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிகிறது. சமூக வலைதளம் இந்தியாவில் வெளியான சில மணி நேரங்களிலேயே, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து இதனை login செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய் போன்களில் திரெட்ஸ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய மெட்டாவின் திரெட்ஸ்: இந்தியாவில் 2 மில்லியன் பேர் இணைந்துள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Twitter ,India ,Washington ,Threeds ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...