×

தமிழகத்தில் கடந்தாண்டை விட குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கர் வரை அதிகரிக்கும்

கடலூர், ஜூலை 6: கடலூரில் குறுவை சாகுபடி திட்ட தொகுப்பை விவசாயிகளுக்கு வழங்கி துவக்கி வைத்த பின்னர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறுகையில், மேட்டூர் அணை திட்டமிட்டுபடி திறக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் 2.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஏக்கருக்கு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்க ரூ.75.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூரில் தண்ணீர் திறப்புக்கு முன்பாகவே தூர்வாரும் பணி கடைமடை வரை முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிகரித்து 5 லட்சம் ஏக்கர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து பாசனத்திற்கு காவிரி தண்ணீர் பெறும் வேலையை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். அதே போன்று கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரை கேட்டுப் பெற வேண்டிய உரிமை நமக்கு இருக்கிறது.

குறுவை சாகுபடி நடவு பணி கிட்டத்தட்ட 3.5 லட்சம் ஏக்கருக்கு மேல் நடந்து கொண்டிருக்கிறது. நடவு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இயந்திர நடவிற்கு வேளாண் துறை சார்பில் உரிய கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இயந்திரம் மூலம் நடவு செய்தால் விதையின் தேவை குறையும். மேலும் செலவும் குறைவு. அதிமுக கட்சி நடத்துவதற்காக எது வேண்டுமானாலும் சொல்லுவார்கள். கடந்த காலங்களில் எங்கு தூர்வாரும் பணி நடைபெற்றது?. தண்ணீர் வரும்போது அவசர நிலையில் தூர்வாரினார்கள். ஆனால் தற்போது முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 99 சதவீதம் தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் கடந்தாண்டை விட குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கர் வரை அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Cuddalore ,Minister ,MRK ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...