×

தொடர் மழை எதிரொலி பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

 

காரமடை,ஜூலை6: பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி. கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை விளங்கி வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி,அவலாஞ்சி,குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதே நேரத்தில் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது.இந்நிலையில் பில்லூர் அணைப்பகுதியில் நேற்று ஒரே நாளில் 4மி.மீ மழையும், அவலாஞ்சி பகுதியில் 18.4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் 81 அடி நீர்மட்டத்துடன் இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2அடி உயர்ந்து 83 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளதால் குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.

The post தொடர் மழை எதிரொலி பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Pillur dam ,Karamadai ,
× RELATED சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து...