×

பொதுக்கூட்டத்தில் அவமதிப்பு, அண்ணாமலை மீது அதிருப்தி நாகர்கோவில் பாஜ கவுன்சிலர்கள் போர்க்கொடி: பொன்.ராதாகிருஷ்ணன் 3 மணி நேரம் பேச்சு தோல்வி; பெண் உறுப்பினர் கணவருடன் கட்சியில் இருந்து விலகல்

நாகர்கோவில்: பொதுக்கூட்டத்தில் அவமதிப்பு, அண்ணாமலை மீது அதிருப்தியால் நாகர்கோவில் பாஜ கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பெண் கவுன்சிலர் கணவருடன் கட்சியில் இருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் குமரி சங்கம நிகழ்ச்சி பொதுக்கூட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட நாகராஜா கோயில் திடலில் கடந்த 2ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட, கோட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்ற இடம், நாகர்கோவில் மாநகராட்சி 24 வது வார்டுக்கு உட்பட்டது ஆகும். இந்த வார்டு கவுன்சிலராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரோசிட்டா உள்ளார். இவரது கணவர் திருமால், கட்சியின் மாநகர பொருளாளராக இருக்கிறார். பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அந்த பகுதி கவுன்சிலர் என்ற முறையில் ரோசிட்டா, அவரது கணவர் திருமால் ஆகியோர் அண்ணாமலையை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என நிர்வாகிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால் ரோசிட்டா மற்றும் அவரது கணவருக்கு, அண்ணாமலையை சந்திக்க வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றினர். மேலும் சில பா.ஜ. கவுன்சிலர்களும் ஏமாற்றப்பட்டனர்.

மறுநாள் கவுன்சிலர் ரோசிட்டாவும், அவரது கணவரும் தங்களது கட்சி பதவிகளை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தனர். கவுன்சிலர்கள் கொந்தளிப்பு குறித்து அறிந்த, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சுமார் 3 மணி நேரம், கவுன்சிலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், ‘கட்சிக்காக எதுவும் செய்யாதவர்களை மேடையில் ஏற்றினர். கட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் எல்லாம் மேடையில் அண்ணாமலையை சந்தித்தனர்’ என்று நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 12 பா.ஜ. கவுன்சிலர்களில் ஒரு சிலர் தவிர, பெரும்பான்மையானவர்கள் மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள், மாநில தலைமை (அண்ணாமலை) மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால், அதிருப்தி கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் இரவு ரகசிய கூட்டம் நடத்தினர். அவர்களை சமாதானம் செய்ய மாவட்ட நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. நேற்று காலையிலும் சமாதானம் பேச முயன்றனர். இதனால் நிர்வாகிகளின் செல்போன் அழைப்புகளை கவுன்சிலர்கள் புறந்தள்ளினர். திட்டமிட்டே கவுன்சிலர்களை கேவலப்படுத்தி உள்ளனர். கட்சியின் மாநில தலைவர் நிகழ்ச்சியில், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அவமரியாதை நடப்பது நியாயமா? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலையை சந்திக்க அதிருப்தி கவுன்சிலர்கள் நேரம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் வெளிநாடு செல்ல இருப்பதால், அதிருப்தி கவுன்சிலர்களை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதனால், மேலும் சில கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் கட்சி தாவவும் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நாகர்கோவில் பாஜ நிர்வாகிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

The post பொதுக்கூட்டத்தில் அவமதிப்பு, அண்ணாமலை மீது அதிருப்தி நாகர்கோவில் பாஜ கவுன்சிலர்கள் போர்க்கொடி: பொன்.ராதாகிருஷ்ணன் 3 மணி நேரம் பேச்சு தோல்வி; பெண் உறுப்பினர் கணவருடன் கட்சியில் இருந்து விலகல் appeared first on Dinakaran.

Tags : Anamalai ,Baja ,Nagargo ,Bonn ,Raadhakrishnan ,Nagarko ,Nagargo Bharkodi ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...