×

கீரப்பாக்கம் ஊராட்சி 4வது வார்டில் கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி சுற்று சுவர் பணி: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 4வது வார்டில் ரூ.5 லட்சம் ஒதுக்கியும் அங்கன்வாடி மைய சுற்று சுவர் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்ளத்தூர் ஒன்றியம் கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு விநாயகபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கன்வாடி மையத்திற்கு சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் 4வது வார்டு உறுப்பினர் மனு கொடுத்து வலியுறுத்தி வந்தார். அதன்பேரில், கனிம வள நிதியின் கீழ் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்டராகவன், தண்டபாணி ஆகியோர் மேற்பார்வையில் அங்கன்வாடி மையத்திற்கு சுற்று சுவர் அமைக்கும் பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால், இதுவரை அங்கன்வாடி சுற்று சுவர் பணிகள் நடைபெறவில்லை, இதனால், அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளத்தில் விழுந்து அடிபட்டு வருகின்றனர். மேலும், பலர் விழுந்து எழுந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பூமி பூஜை போடப்பட்டு ஒரு வாரம் கழித்து அந்த அங்கன்வாடி மையம் அருகே வசித்து வரும் மாணவர்கள் இந்த மையத்தில் வந்து விளையாடும்போது, சுற்று சுவருக்காக எடுக்கப்பட்ட பள்ளத்தில் விழுந்ததில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை.

அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கீரப்பாக்கம் ஊராட்சி 4வது வார்டு பகுதியில் 300க்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள 5வது வார்டில் 70க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்காக விநாயகபுரம் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டன. இதில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், தரமற்ற முறையில் கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்திற்கு இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால், குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல், அங்கன்வாடி மையத்தை சுற்றி சுற்று சுவர் அமைக்கும் பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஊராட்சி மன்ற தலைவர் பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். ஆனால், இதுவரை சுற்று சுவர் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை.

மேலும், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகள் பள்ளத்தில் விழுந்து அடிப்பட்டு எழுந்து செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி சுற்று சுவர் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கீரப்பாக்கம் ஊராட்சி 4வது வார்டில் கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி சுற்று சுவர் பணி: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Keerpakkam Panchayat 4th Ward ,Guduvanchery ,Keerpakkam ,panchayat 4th ,ward ,panchayat ,4th ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது