×

உயிரியல் பூங்கா மேம்பாட்டுக்கு சன் டி.வி. ரூ.5 கோடி நிதியுதவி

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய மேம்பாட்டுக்காக சன் டி.வி. ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் சன் டி.வி. 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் சீனிவாச ரெட்டி மற்றும் துணை இயக்குநர் காஞ்சனா, உதவி இயக்குநர் மணிகண்ட பிரபு ஆகியோரிடம் சன் டி.வி சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார்.

இந்த நிதியைப் பயன்படுத்தி, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேட்டரி மூலம் இயங்கும் 10 வாகனங்கள், சிங்க உலா வாகனங்கள் வாங்கப்படும். அத்துடன், விலங்குகள் மற்றும் பறவைகள் இருப்பிடங்களைப் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழை எளியோருக்குக் கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சன் டிவியும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை 185 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post உயிரியல் பூங்கா மேம்பாட்டுக்கு சன் டி.வி. ரூ.5 கோடி நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Sun TV ,Vandalur Arinjar Anna Zoo ,Veddangal Bird Sanctuary ,Dinakaran ,
× RELATED சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக...