×

காஞ்சிபுரம் ரேஷன் கடையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டி தெரு ரேஷன் கடையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை எழிலரசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை உயர்வு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாக தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு வித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக தக்காளி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, கூட்டுறவுத்துறை மூலம் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு, ரூ.60 ரூபாய்க்கு தக்காளியை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை நேற்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டி தெருவில் உள்ள ரேஷன் கடையில் மலிவு விலை தக்காளி விற்பனை துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு, மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளியை 60 ரூபாய்க்கு விற்பனை திட்டத்தை துவக்கி வைத்தார்.

முன்னதாக மலிவு விலை தக்காளி விற்பனையை துவக்கி வைத்த எம்எல்ஏவுக்கு, தக்காளிக் கூடையை சிறப்பு பரிசாக அளித்தனர். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, மண்டல குழு தலைவர் சந்துரு, மாநகராட்சி பணி குழு தலைவர் சுரேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் ரேஷன் கடையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை: எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,MLA ,Chetti Street ,Kanchipuram Municipal Corporation ,Ehilarasan ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்