×

ஹைபிரிட் எலக்ட்ரிக் கார்கள் சிறந்த தீர்வாக அமையும்; டொயோட்டா தலைவர் விக்ரம் குலாட்டி கருத்து

டொயோட்டா தலைவர் விக்ரம் குலாட்டி கருத்து

கர்நாடகா மாநிலம் பிடதியில் டொயோட்டா கார் உற்பத்தி ஆலை உள்ளது. இங்கு கார் உற்பத்தி செயல்பாடுகள், டொயோட்டா தொழில்நுட்ப பயிற்சி மையம் மற்றும் சுற்றுச்சூழலை காப்பதற்கான மியாவாக்கி காடுகள் மற்றும் ஆலைக்கு தேவையான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பார்வையிட்ட பிறகு, டெயோட்டா நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவரும் செயல் துணை தலைவருமான விக்ரம் குலாட்டி கூறியதாவது:

குறைந்த கார்பன் வெளிப்படுத்தும் அல்லது கார்பன் வெளிப்படுத்தாக கார்களை உற்பத்தி செய்வது மட்டுமல்ல, இவற்றில் எந்த எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான எரிபொருள் பயன்பாடு பிரதானமாக உள்ளது. நம் நாட்டைப் பொறுத்தவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு சூரிய மின் உற்பத்தியைச் சார்ந்திருக்கிறோம். இதுபோல் காற்று மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எத்தனால் எந்த அளவு பயன்படுத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு கார்பன் வெளிப்பாடும் குறைகிறது. இதனை ஐசிஇ இன்ஜினில் பயன்படுத்துவதன் மூலம், கார்பன் வெளிப்பாடும் அபரிமிதமாகக் குறைந்து விடும்.

பிளக்சி எரிபொருளை (இரண்டு வகையான எரிபொருட்களை பயன்படுத்துதல், உதாரணமாக, பெட்ரோல் மற்றும் எத்தனால்) பொறுத்தவரை, சில நாடுகளில் 85 சதவீதம் வரை எத்தனால் கலக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் இன்ஜின்களை மேம்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எத்தனால் கலப்பு சதவீதம் அதிகரிக்கும்போதும், ஏற்கெனவே உள்ள இன்ஜினில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்தாலே போதுமானது. ஏற்கெனவே சாலைகளில் ஓடும் எங்கள் வாகனங்களில் 20 சதவீத எத்தனால் பெட்ரோல் பயன்படுத்தினாலும் பாதிப்பு இருக்காது.

இதோடு எலக்ட்ரிக் மோட்டார் இணைந்த ஹைபிரிட் வாகனமாக இருந்தால், வாகன செயல் திறன் அதிகரிப்பதோடு 29 சதவீதம் வரை கூட பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க முடியும். கார் உற்பத்தி ஆலைக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் காற்று மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் எரிசக்தி சார்பைக் குறைத்திருக்கிறோம். விரைவில், கார்பன் சாராத மின் உற்பத்தியில் 100 சதவீதத்தை எட்டி விடுவோம். எலக்ட்ரிக், ஹைபிரிட், எத்தனால், பிளக்சி எரிபொருள் எல்லது எலக்ட்ரிக் மற்றும் பிளக்சி எரிபொருள் என எதுவாக இருந்தாலும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இருப்பினும், எத்தனால் பயன்பாடு என்பது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கிறது.

ஹைபிரிட் வாகனங்கள் விலை அதிகம் என்றாலும், இவற்றின் சந்தை பங்களிப்பு ஏறக்குறைய 1.5 சதவீதமாகவும் உள்ளது. எலக்ட்ரிக் வாகன பங்களிப்பும் இதே அளவுதான். மற்ற அனைத்தும் பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்கள்தான். இதனால்தான், இவற்றிடையேயான விலையை குறைக்கும் வகையில் சலுகைகளை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கர்நாடகா பிடதி ஆலை ஆண்டுக்கு 3.5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் அளவை எட்டிய பிறகே பிற மாநிலங்களில் ஆலை நிறுவுவது பற்றி திட்டமிட முடியும். முழு திறன் உற்பத்தி அளவு இன்னும் எட்டப்படவில்லை. எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருந்தாலும் இதற்கான உட்கட்டமைப்புகள் எட்டப்படும் வரை எலக்ட்ரிக் ஹைபிரிட் வாகனங்கள் சிறந்த தீர்வாக அமையும். எனவே இதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு விக்ரம் குலாட்டி கூறினார்.

மாணவர்களுக்கு பயிற்சி

டொயோட்டா நிறுவனம், தனது பிடதி ஆலையில் தொழில்நுட்ப பயிற்சி மையம் அமைத்துள்ளது. அதில், கர்நாடக கிராமப் பகுதிகளில் இருந்து ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சியை 3 ஆண்டுகளுக்கு அளிக்கிறது. விரும்பினால், பயிற்சி முடிந்து அதே ஆலையில் பணியில் சேரலாம். 600 பேர் பயிற்சி பெறலாம். இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டில் இரட்டிப்பாக்கப்பட உள்ளதாக இந்த நிறுவனத்தினர் கூறினர். பிற மாநிலங்களில் இருந்து வரும் தொழிற்கல்வி பயிற்சியாளர்கள் இதில் கட்டணம் செலுத்தி 15 நாட்கள் பயிற்சி பெறலாம்.

பழைய வாகன மறு சுழற்சி

வாகன உதிரி பாக தட்டுப்பாட்டு ஓரளவு இருந்தாலும், ஹைபிரிட் உட்பட கார்களுக்கு தேவையான பல உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்கிறோம். பழைய வாகன அழிப்பு கொள்கையை அரசு கொண்டு வந்துள்ளது. எங்கள் ஆலையில் பழைய வாகனத்தை மறு சுழற்சி செய்து 95 சதவீதம் வரை மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியும். பரிசோதனை முயற்சியாக இது செயல்படுத்தப்படுகிறது என குலாட்டி தெரிவித்தார்.

The post ஹைபிரிட் எலக்ட்ரிக் கார்கள் சிறந்த தீர்வாக அமையும்; டொயோட்டா தலைவர் விக்ரம் குலாட்டி கருத்து appeared first on Dinakaran.

Tags : Toyota ,President ,Vikram Gulati ,Pitathi, Karnataka ,Dinakaran ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!