×

செங்கணான் செய்த கோயில் சேர்மீன்காள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

‘‘தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்’’ – என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடும் கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் ஒருவர், அறுபத்து மூவருள் ஒருவராகப் போற்றப் பெறுபவராவார். கோச்செங்கணானின் வரலாற்றை நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில்,

‘‘மை வைத்த கண்டன் நெறி அன்றி மற்று ஓர் நெறி கருதாது
தெய்வக்குடிச் சோழன் முன்பு சிலந்தியாய் பந்தர் செய்து
சைவத்து உரு எய்தி வந்து தரணி நீள் ஆலயங்கள்
செய்வித்தவன் திருக் கோச்செங்கணான் எனும் செம்பியனே’’

என்று சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

சேக்கிழார் பெரியபுராணத்தில் பதினெட்டுப் பாடல்கள் வாயிலாகக் கோச்செங்கணானின் வரலாற்றை விரித்துரைத்துள்ளார். புறாவுக்காகத் தன் உடல் சதைப் பொதியைத் தந்த சிபிச் சோழனின் உரிமை மரபில் திகழும் சோழ நாட்டில் காவிரி நதிக்கரையில் திகழும் சந்திர தீர்த்தத்தின் அருகே குளிர்சோலைகளுடன் ஒரு காடு திகழ்ந்தது. அங்கிருந்த வெண் நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கம் ஒன்று வெளிப்பட அதனை வெள்ளை நிற யானை ஒன்று தன் துதிக்கையால் நீரை முகந்து வந்து இலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்து பூங்கொத்துக்களை இட்டு நாளும் வழிபட்டு வந்தது. அதனால், அந்த இடம் திரு ஆனைக்கா என அழைக்கப்படலாயிற்று. நாவல் மரத்தில் திகழ்ந்த சிலந்தி ஒன்று பெருமான் மீது சருகு உதிர்வதைக் கண்டு பெருமானுக்கு மேலாக தன் வாய் நூலால் பந்தல் ஒன்றினை மேற்கட்டியாகச் செய்தது.

அங்கு வழிபாட்டுக்கு வந்த வெள்ளை யானை சிலந்தியின் வாய்நூல் பந்தரைக் கண்டு இது அனுசிதம் எனக் கருதி அதனைத் தன் துதிக்கையால் முற்றிலுமாகச் சிதைத்து அழித்தது. நாளும் நாளும் இச்செயல் தொடர வருந்திய சிலந்தி ஒருநாள் பந்தரைச் சிதைக்க முற்பட்ட யானையின் துதிக்கையுள் புகுந்து கடித்தது. வலி தாளாத யானை துதிக்கையை வேகமாகத் தரையில் மோதி அடிக்க, யானையும் சிலந்தியும் ஒருங்கே இறந்தன.

சிவபெருமான் வெள்ளை யானைக்கு வரங்கொடுத்து அருளியதோடு இறந்த சிலந்தியினைச் சோழ அரச குலத்தில் திகழ்ந்த சுபதேவன் எனும் மன்னனுக்கும் கமலவதி எனும் அவன் தேவிக்கும் மகவாய் பிறக்குமாறு அருள்பாலித்தான். அத்தேவி கருவுற்று மகப்பேறு அடையும் நேரத்தை ஒரு நாழிகை தள்ளிப்போட்டு மிகச்சிறந்த நேரத்தில் ஆண் மகவை ஈன்று உயிர் நீத்தாள். அதன் காரணமாகப் பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்து காணப்பெற்றன. அதனால் செங்கணான் எனப் பெயரும் பெற்றான். வளர்ந்து கோச்செங்க சோழனாக அரசுப் பொறுப்பேற்ற பின்பு, முன்பு ஆனைக்காவில் தாம் சிலந்தியாக இருந்து அருள் பெற்றதனை உணர்வால் அறிந்து சிவபெருமானுக்காக அங்கு கோயில் எடுப்பித்தார்.

அந்தமில் சீர் சோணாட்டிலும் அகநாடுகளிலும் சந்திரசேகரர் மருந்தானங்கள் பல செய்தார். அவைகளுக்கு அளவிலா நிவந்தங்களும் நல்கினார். சிவத்தொண்டுகள் பல புரிந்து நிறைவாகத் தில்லை அம்பலவன் திருப்பொற்பாதங்களில் ஒன்றினார் என்பதே சேக்கிழார் கூறும் புராண வரலாறாகும்.செங்கணான் சோழமன்னனாகத் திகழ்ந்த வண்ணம் காவிரியின் இருமருங்கும் சிவபெருமானுக்கென எழுபது மாடக்கோயில்களை எடுத்தான். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் எண்தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்தவன் சோழன் என்பதைச் சுட்டியுள்ளார். அதே பாசுரத்தில், திருநறையூர் மணிமாடக் கோயிலையும் அவனே எடுப்பித்தவன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் அடைவு திருத்தாண்டகத்தில் சிவனுக்கென எடுக்கப்பெற்ற எழுபது பெருங்கோயில்களோடு எட்டு கோயில்களையும் குறிப்பிட்டுள்ளார். ‘‘எழுபதினோடு எட்டு’’ என்பது அவர் வாக்கு. இந்த எட்டு கோயில்களும் திருமாலுக் காகச் செங்கணானால் எடுக்கப் பெற்றவையாகும்.மூவர் முதலிகளின் பதிகப் பாடல்கள் வாயிலாகவும், நம்பியாண்டார் நம்பியின் பனுவல்கள் வாயிலாகவும் சேக்கிழார் பெருமானின் கூற்று வழியும் நாம் அறியும் கோச்செங்கணானின் புராண வரலாறு குறித்த இரண்டு அரிய சோழர் கால சிற்பப் படைப்புகள் மானம்பாடி கைலாசநாதர் ஆலயத்திலும், தாராசுரம் ராஜராஜேச் சுரத்திலும் உள்ளன. அவை தம் சிறப்புகள் பற்றி இனிக் காண்போம்.

குடந்தை திருப்பனந்தாள் நெடுஞ்சாலையில் உள்ள மானம்பாடி கைலாசநாதர் கோயில் மகாமண்டபத்து வடபுற கோஷ்டம் ஒன்றின்மேல் காணப்பெறும் மகர தோரணத்தில் கோச்செங்கட்சோழனின் வரலாற்றுச் சிற்பமொன்று இடம் பெற்றுள்ளது. வெண் நாவல் மரமொன்று கிளைகளுடன் திகழ ஒரு கிளையில் சிலந்தி ஒன்று காணப்பெறுகின்றது. அக்கிளைக்கு நேர் கீழாகச் சிவலிங்கம் ஒன்று காணப்பெற அதனை ஒரு யானை துதிக்கையில் மலர்கள் ஏந்தியவாறு பெருமானின் சிரசில் வைத்து பூஜிக்கின்றது.

வெண்ணாவல் மரத்தை ஒட்டி தன் வலக்கரத்தில் சாமரம் ஒன்றினைப் பிடித்தவாறு இடக்கரத்தை உயர்த்தி விஸ்மயம் (வியப்பு முத்திரை) காட்டியவாறு காவிரி நங்கை ஈசனைப் போற்றி நிற்கின்றாள். மரத்தில் உள்ள சிலந்தியின் உருவம் பெரிதாகவும் தெளிவாகவும் செதுக்கப் பெற்றுள்ளது.

திருஞானசம்பந்தர் ஆனைக்காவில் பாடிய பதிகங்களில் ‘‘வெண்நாவலின் மேவிய அழகா, வெண்நாவல் உளாய்’’ எனப் பலவாறு குறிப்பிட்டு செம்பியர் கோனுக்கு அருளியவன் என்பதையும், யானைக்கும் அருளிய திறத்தை ‘‘விறல் மிக்க கரிக்கு அருளியவனே’’ என்றும் சுட்டியுள்ளார்.

ஆனைக்கா அண்ணல் உமையொரு பங்கன் என்பதை,

‘‘ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்
காவில் அண்ணலார்
காணும் கண் மூன்றுடைக் கறைகொள் மிடறன் அல்லனே’’

என்றும்,

‘‘தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள்
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே’’

என்று கூறுவதோடு, காவிரிக் கரையில் அவன் உளான் என்பதை,

‘‘சேறுபட்ட தண்வயல் சென்று சேண் உலாவு
ஆறுபட்ட நுண்துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகர் இல்பாதம்
ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லாரே’’

என்று போற்றிப் பாடியுள்ளார்.

திருநாவுக்கரசு பெருமானார் அங்கு பாடிய பதிகங்களில்,

‘‘சித்தாய வேடத்தாய் நீடுபொன்னித்
திருஆனைக்கா உடைய சேல்வா’’

என்றும்,

‘‘திரு ஆர்புனல் பொன்னி தீர்த்தம் மல்கு
திரு ஆனைக்காவில் உறைதேனே’’

என்றும் பாடிப் பரவியுள்ளார்.

இந்திய சிற்ப இயல் மரபுப் படியும், சேரமான் பெருமானின் திருக்கயிலாய ஞான உலாவின் கூற்றுப்படியும் கங்கை, யமுனை, காவிரி போன்ற நதிப்பெண்கள் ஈசனுக்கு சாமரம் வீசும் கோலக்காட்சிகள் இடம் பெற்றுள்ளமையை அறியலாம். எனவே, மானம்பாடி சிற்பக் காட்சியில் சாமரம் ஏந்தி நிற்பவள் காவிரி நங்கையே என்பதில் ஐயமே இல்லை.

தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயிலின் புறச்சுவரில் திகழும் திருத்தொண்டத்தொகை கூறும் அறுபத்து மூவர் வரலாற்றுச் சிற்பத் தொடரில் அறுபத்தெட்டாம் சிற்பக்காட்சிக்கு மேலாக ‘‘கோச்செங்கப்பெருமாள்’’ என்ற சோழர்காலக் கல்வெட்டுப் பொறிப்பு ஒன்று உள்ளது. அதன் கீழாக வெண்நாவல் மரத்தின் கிளை ஒன்று திகழ அதன் கீழே கோயிலொன்று காணப்பெறுகின்றது.

அதன் முன்பு கோச்செங்கண்ணான் இருகரம் கூப்பி வழிபட்டு நிற்கின்றான். ஒருபுறம் மான் மழு ஏந்திய சிவபெருமான் உமையவளின் கரத்தைப் பற்றியவாறு நிற்க அவர் காலடியில் கோச்செங்கணான் மண்டியிட்டு வணங்கியவாறு திகழும் சிற்றுருவம் உள்ளது. கோயிலை அடுத்து உள்ள பகுதியில் முனிபுங்கவர் ஒருவர் பத்மாசனமிட்டு யோக நிலையில் அமர்ந்துள்ளார். இக்காட்சியைக் கண்ட கண்களுடன் சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்தில் உள்ள கோட்செங்கட்சோழ நாயனார் புராணத்தில் உள்ள பதிமூன்றாம் பாடலினை நோக்குவோமாயின் இச்சிற்பக் காட்சிக்கும், மூவர் முதலியர் பாடிய பதிகப் பாடல்களுக்கும் உரிய தொடர்பை அறிவோம். சேக்கிழார் பெருமான் கூற்றாக,

‘‘ஆனைக்காவில் தாம் முன்னம் அருள் பெற்றதனை அறிந்து அங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழுங்கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்ணாவலுடனே கூட நலஞ்சிறக்கப்
பானற் களத்துத் தம் பெருமான் அமருங்கோயில் பணி சமைத்தார்’’

என்ற பாடல் அமைந்துள்ளது.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post செங்கணான் செய்த கோயில் சேர்மீன்காள்! appeared first on Dinakaran.

Tags : Senganan ,Sengan ,Sundaramurthy Swami ,Kochenganan ,
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்