×

குரு – ராகு தரும் சண்டாள யோகம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

பிரகஸ்பதியாகிய வியாழனும் (குரு) அசுப கிரகமான ராகுவும் இணையும் பொழுது என்ன பலன்கள் கொடுக்கும். இரண்டு கிரகங்களும் பெரிய வேலையைச் செய்பவையாகும். சாயா கிரகம் (ராகு) என்பதனால் சில மாற்றங்களையும் வாழ்வில் ஏற்றங்களையும் இறக்கங்களையும் கொடுக்கும் தன்மையுடையதாக இருக்கிறது. சிலருக்கு இந்த இணைவுகள் நற்பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அதன் இணைவை காண்போம்.

ஜோதிடத்தில் குரு – ராகு இணைவுகள்

ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்தில் இருந்து ஒன்றாம் (1ம்) இடம், ஐந்தாம் இடம் (5ம்), ஒன்பதாம் (9ம்) இடத்தில் ராகு இருந்தாலும் குரு, ராகுவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் ராகு, குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் குரு, ராகு ஒரே ராசிக் கட்டத்தில் இருந்தாலும் இணைவாக எடுத்துக் கொள்ளலாம்.

குரு – ராகு இணைவு கேந்திரத்தில் குருவும் ராகுவும் கேந்திரத்தில் இணைந்திருந்தால் அதாவது 1, 4, 7, 10 இடங்களில் இணையும் பட்சத்தில் நற்பலன்களும் உண்டு அசுப பலன்களும் உண்டு.

ஒன்றாம் இடமாகிய லக்னத்தில் (1ம் இடம்) இருக்கும் பட்சத்தில் சிந்தனைகள் எல்லாம் மிகப்பெரிய அளவில் அபரிமிதமாக இருக்கும்.

நான்காம் இடத்தில் அமர்ந்திருந்தால் (4ம் இடம்) வீடு, வாகனம் எல்லாம் மிகப் பிரமாண்டமாக வாங்க முயற்சி செய்வார்கள். இவர்களுக்கான வீடு நீளமாகவோ அல்லது உயரமாகவோ இருக்கும். இவர்களின் வீடுகளை ஒட்டி குறுகிய சின்ன தெரு போன்ற சந்து இருக்கும். தாயிற்கு அடிக்கடி தோல் தொடர்பான வியாதிகள் உண்டாகும். ஒழுக்கம் பாதிக்கப்படும்.

ஏழாம் இடத்தில் (7ம் இடம்) இருந்தால் நண்பர்கள், தொழில் பாட்னர்கள் மிகப்பெரிய அளவில் தொழில் செய்பவர்களாக இருப்பர். தீய சகவாசங்கள், தீய பழக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பத்தாம் இடத்தில்(10ம் இடம்) இருந்தால் இவர்கள் தொழிலை பிரமாண்டமாக செய்வார்கள். தொழிலும் நன்கு மேன்மை அடையும்.

குரு – ராகு இணைவின் பொதுவான பலன்கள்…

* சூதாட்டம் விளையாடுபவர்களாக இருப்பர், வெற்றிக்காக விடாமல் தொடர்ந்து ஏமாற்ற முயல்வார்கள்.

* சிலர் தாங்கள் சம்பாதித்த பணத்தை இழந்து விடுவார்கள். ஷேர் மார்க்கெட்டில் கூட பணத்தை விட்டுவிடுவார்கள்.

* சிலருக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருக்கும் அதனால் குடல் புழுக்கள் உற்பத்தியாகி விடும்.

* சிலருக்கு தலையில் செதில்கள் அதிகமாக உதிரும். பொடுகு தொல்லைகள் உண்டாகும்.

* இவர்கள் நினைக்கும் எண்ணங்களையே செயல்படுத்துவதற்கு முயற்சி செய்வார்கள். மற்ற விஷயங்களுக்கு இவர்கள் செவி கொடுக்க மாட்டார்கள்.

* ராகு திசை நடக்கும் காலத்தில் இவர்கள் மிகவும் ஒல்லியாக இருப்பர். பின்பு, குரு திசை நடக்கும் காலத்தில் அதற்கு நேர்மாறாக மிகவும் குண்டாகி விடுவார்கள். ஆன்மிகத்தில் தொடர முடியாத சூழ்நிலைகள் உண்டாகும்.

* இளமையான காலத்தில் கல்வியில் தடைகள் உண்டாகும். விளையாட்டில் அதிக ஈடுபாடுகள் ஏற்படும்.

* கொலஸ்ட்ரால் தொடர்பான வியாதிகள் உண்டாக வாய்ப்புகள் அதிகம்.

உலகியல் ஜோதிடத்தில் குரு – ராகு இணைவால் உண்டாகும் பலன்கள்…

ஆன்மிகத்தில் குருவிற்கு இணையாக இருக்கும் நபர்கள் மாறாக நடந்து கொள்வார்கள். அவர்கள் அவமானங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கோயில்களில் தேவாலயங்களில் சிறு சிறு பிரச்னைகள் உண்டாகும். அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் இல்லாமல் நீண்டு கொண்டே செல்லும்.

மரங்கள் வெட்டப்படுவதும் இயற்கை சீற்றங்களால் மரங்கள் விழுவதும் குரு – ராகுவின் சேர்க்கையின் காலத்தில் அதிகமாக நிகழும்.

காடுகளில் உள்ள யானைகள் காட்டைவிட்டு வெளியேறி நகரத்திற்குள் உலாவும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்தேறும்.

குரு – ராகு காலத்தில் இனிப்பான பொருட்களை உண்ணும் போது கவனம் தேவை. அவைகளில் பூச்சிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குரு – ராகு இணைவிற்கான பரிகாரம் என்ன?

* நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலுக்கு சென்று வியாழக்கிழமை விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பாகும்.

* உளுந்தில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து செய்யப்பட்ட இனிப்பான பட்சணங்கள் செய்து தானமாக வழங்கலாம்.

* கரும்பு துண்டுகளை யானைக்கு தானமாக வழங்கலாம்.

* வியாழக்கிழமை ராகு காலத்தில் பரிகாரமாக செய்யும் வழிபாடுகள் இன்னும் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக காளஹஸ்தி கோயிலில் ராகு காலத்தில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டு.

The post குரு – ராகு தரும் சண்டாள யோகம் appeared first on Dinakaran.

Tags : Sivakanesan ,Pragaspatya ,Jupiter ,Azuba ,Raku ,
× RELATED வரதட்சணையின்றி திருமணம் அமையும் சண்டாள யோகம்