×

உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம்: பிரதமர் மோடியுடன் முதல்வர் தாமி சந்திப்பு

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சமீபத்தில் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்து இருந்தார். இதனிடையே முதல்வர் தாமி டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் தாமி கூறுகையில், ‘‘ பிரதமர் மோடிக்கு பொது சிவில் சட்டம் குறித்த அனைத்து விவரங்களும் ஏற்கனவே தெரியும். நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்பதே பிரதமரின் எண்ணமாகும். விரைவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம். தாமதிக்கவும் மாட்டோம். அவசரப்பட்டு எதையும் செய்யவும் மாட்டோம். பிரதமர் மோடியை உத்தரகாண்ட் மாநிலத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளேன்” என்றார்.

* அவசரப்படக்கூடாது
சட்டீஸ்கரில் பழங்குடியின குழுக்களின் ஒருங்கிணைந்த குழுவான சட்டீஸ்கர் சர்வா ஆதிவாசி சமாஜ் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் அர்விந்த் நேதாம் கூறுகையில்,‘‘ஒன்றிய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் அவசரப்படக்கூடாது. அத்தகைய சட்டம் பழங்குடியின மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். பழங்குடியினர் தங்களது சமூகத்துக்கு என்று சொந்த விதிகளை கொண்டுள்ளனர். பழங்குடியினர் சமூகத்தில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நடைமுறைக்கு மாறானது” என்றார்.

* சரியான நேரம்
அசாம் கவுகாத்தியில் தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பேசிய குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், ‘‘பொது சிவில் சட்டமானது நிறுவன தந்தைகளின் சிந்தனை செயல்முறையாகும். இதனை செயல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. அமல்படுத்துவதில் எந்த தடையும் அல்லது தாமதமும் இருக்க முடியாது” என்றார்.

The post உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம்: பிரதமர் மோடியுடன் முதல்வர் தாமி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : CM ,PM Modi ,New Delhi ,Modi ,Delhi ,Chief Minister ,Pushkar ,Uttarakhand ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?