×

பொய்யை யார் கேட்பா? காலி நாற்காலிகளிடம் பேசுகிறார் அண்ணாமலை: காயத்ரி ரகுராம் கிண்டல் வீடியோ

கரூர்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டங்களில் காலி மைதானங்களை பார்த்து பேசுவதாக அக்கட்சியின் முன்னாள் நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் கிண்டலடித்திருக்கிறார். கரூரில் கடந்த 1ம் தேதி பாஜ சார்பில் கரூர் மாற்றத்திற்கான மாநாடு என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 9 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதுமிருந்து ஆட்களை அழைத்து வர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கிய போது ஓரளவு ஆட்கள் அமர்ந்திருந்தனர். ஆனால் அண்ணாமலை பேசத் தொடங்கியபோது கூட்டம் கலைய தொடங்கியது. இதனால் பெரும்பாலான நாற்காலிகள் காலியாயின. இருப்பினும் அண்ணாமலை தனது பேச்சை தொடர்ந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சு அடங்கிய வீடியோவை அக்கட்சியின் முன்னாள் நிர்வாகியும், பிரபல நடிகையுமான காயத்ரி ரகுராம் டிவிட் செய்திருக்கிறார். அதில், அண்ணாமலையின் பொய்யை யார் கேட்பார்கள், அவரது மலிவான அரசியலை யார் பார்ப்பது, ஜாலியோ ஜிம்கானா… மேடையில் 200 பேர் நெருக்கியடித்து அமர்ந்திருக்கிறார்கள், மேடைக்கு முன் அமர்ந்து 200 பேர் பார்க்கிறார்கள். பின்புறம் காலியாக இருக்கிறது. டெக்னிக்லாக 400 பேரை ஆயிரம் பேராக காட்டுவது எங்களின் சினிமா டெக்னிக். உங்களுக்கான அண்ணாமலையின் கூட்டங்களின் உண்மையான ரிப்போர்ட் இது என்று கூறி மோடி, அமித்ஷாவை டேக் செய்து காயத்ரி ரகுராம் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* மேடை அலங்காரத்துக்கு பணம் தரவில்லை
கரூரில் பாஜ பொதுக்கூட்டம் முடிந்து கடந்த இரண்டு நாட்களாக மேடையை பிரித்து சாமான்கள் லாரியில் ஏற்றப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மேடை, மின் விளக்குகள் அமைத்த ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு பணம் பட்டுவாடாசெய்யவில்லை எனக் கூறி சாமான்களை ஏற்றிய 4 லாரிகளை சிறைபிடித்துப் போராட்டம் செய்தனர். இதையடுத்து கரூர் டவுன் போலீசார் வந்து விசாரித்தனர். மேடையில் மின்விளக்கு போட்ட மணிகண்டன் தனக்கு பேசியபடி முழுத் தொகை வழங்கவில்லை என கரூர் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதே போன்று பலருக்கும் பணம் பட்டுவாடா முழுமையாக செய்யப்படாததால் அவர்களும் மைதானத்தில் காத்திருக்கின்றனர். இது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில் கரூர் மாவட்ட பாஜ வெளியிட்ட அறிக்கையில், ‘மேடை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்ததாரர் மாமுண்டியிடம் முழு தொகையும் வழங்கப்பட்டு விட்டது’ என கூறப்பட்டுள்ளது. ‘சம்பந்தப்பட்ட மாமுண்டியை செல்போனில் தொடர்பு கொண்டால் அதனை அவர் எடுப்பது இல்லை. எங்களுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே லாரிகளை விடுவிப்போம்’ என்று ஒப்பந்ததாரர்கள் கூறினர்.

The post பொய்யை யார் கேட்பா? காலி நாற்காலிகளிடம் பேசுகிறார் அண்ணாமலை: காயத்ரி ரகுராம் கிண்டல் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Gayathri Raghuram ,Karur ,Gayatri ,BJP ,president ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...