×

தமிழக ரயில்களில் ஏசி பெட்டிகள் அதிகரிப்பு ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ரயில்வே: இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, முன்பதிவில்லா பெட்டிகள் குறைப்பு

நாட்டின் முக்கிய போக்குவரத்தாக விளங்கும் ரயில்வேயில், தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மக்களின் வாழ்வோடு ஒன்றிய ரயில் போக்குவரத்தில், வசதி படைத்தவர்கள் முதல் அன்றாட வாழ்வு நடத்தும் நடுத்தர, ஏழைகள் வரை பயணிக்கின்றனர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்றார்போல், ரயில்களில் ஏசி பெட்டி, இரண்டாம் வகுப்பு முன்பதிவு படுக்கை வசதி பெட்டி, முன்பதிவில்லா பெட்டி என இருக்கிறது. இவற்றில் சமீபகாலமாக ரயில்வே நிர்வாகம், நீண்டதூரம் பயணிக்கும் ரயில்களில் வருவாயை அதிகளவு ஈட்டும் நோக்கில் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதற்காக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கின்றனர்.

இதற்கு பயணிகள் மத்தியில் எதிர்ப்பு இருக்கும் நிலையிலும், தொடர்ந்து முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை குறைத்துவிட்டு, மூன்றடுக்கு ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர். இந்தவகையில் நேற்று தெற்கு ரயில்வே நிர்வாகம், தமிழ்நாடு, கேரளாவில் இருந்து நீண்டதூரத்திற்கு இயங்கும் 8 முக்கிய ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மன்னார்குடி-பகத் கி கோதி எக்ஸ்பிரசில் (22674, 22673) வரும் 24ம் தேதி முதல் 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக இரண்டடுக்கு ஏசி பெட்டி-1, மூன்றடுக்கு ஏசி பெட்டி-3 இணைக்கப்படுகிறது. ராமேஸ்வரம்-ஓஹா எக்ஸ்பிரசில் (16733, 16734) வரும் 28ம் தேதி முதல் 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகிறது. திருவனந்தபுரம்-மங்களூரு எக்ஸ்பிரசில் (16347, 16348) வரும் 25ம் தேதி முதல் ஒரு முன்பதிவில்லா பெட்டி நீக்கப்பட்டு, ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியும், மங்களூரு-லோக்மான்யதிலக் எக்ஸ்பிரசில் (12620, 12619) வரும் 26ம் தேதி முதல் ஒரு முன்பதிவில்லா பெட்டி நீக்கப்பட்டு, ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியும் இணைக்கப்படுகிறது.

கோவை-ராஜ்கோட் எக்ஸ்பிரசில் (16614, 16613) வரும் 30ம் தேதி முதல் 4 இரண்டாம் வகுப்பு பெட்டி நீக்கப்பட்டு, 4 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், கோவை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் (16618, 16617) ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 4 இரண்டாம் வகுப்பு பெட்டி நீக்கப்பட்டு, 4 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், சென்னை எழும்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரசில் (22663, 22664) வரும் 29ம் தேதி முதல் 5 இரண்டாம் வகுப்பு பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகிறது. சென்னை எழும்பூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரசில் (12667, 12668) வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 5 இரண்டாம் வகுப்பு பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இப்படி 8 முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும், முன்பதிவில்லா பெட்டிகளும் குறைக்கப்படுவதால், நடுத்தர மக்களின் பயணம் பாதிக்கப்படுகிறது.

ரயில் போக்குவரத்தை அதிகப்படியான மக்கள் விரும்பும் நிலையில், அவர்கள் பயணிக்க வசதியாக இருக்கும் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியை குறைப்பதன் மூலம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றனர். மூன்றடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க வேண்டும் என்றால், வழக்கமாக செலுத்தும் கட்டணத்தில் இருந்து 3 மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு ரயில்வே நிர்வாகம் தள்ளியுள்ளது. இப்படியே சென்றால், ரயில் பயணம் என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே மாறிவிடும். லாப நோக்கில் இத்தகைய மாற்றத்தை ரயில்வே நிர்வாகம் செய்து வருவதற்கு பயணிகளும், ரயில்வே தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

* மூன்றடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க வேண்டும் என்றால், வழக்கமாக செலுத்தும் கட்டணத்தில் இருந்து 3 மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு ரயில்வே நிர்வாகம் தள்ளியுள்ளது. இப்படியே சென்றால், ரயில் பயணம் என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே மாறிவிடும்.
* லாப நோக்கில் இத்தகைய மாற்றத்தை ரயில்வே நிர்வாகம் செய்து வருவதற்கு பயணிகளும், ரயில்வே தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

* ஏற்கனவே 8 ரயில்களில் மாற்றம்
தெற்கு ரயில்வே நிர்வாகம் கடந்த மாதம் 8 ரயில்களில் தலா ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியை குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக தலா ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி இணைக்கப்படுவதாக அறிவித்தது. அதன்படி, மங்களூரு-திருவனந்தபுரம் மாவேலி எக்ஸ்பிரஸ் (16603), திருவனந்தபுரம்-மங்களூரு மாவேலி எக்ஸ்பிரஸ் (16604), மங்களூரு-சென்னை சென்ட்ரல் மெயில் (12602), சென்னை சென்ட்ரல்-மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (22637), மங்களூரு-சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (22638), சென்னை சென்ட்ரல்-மங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ் (12601), மங்களூரு-திருவனந்தபுரம் மலபார் எக்ஸ்பிரஸ் (16630), திருவனந்தபுரம்-மங்களூரு மலபார் எக்ஸ்பிரஸ் (16629) ஆகிய 8 ரயில்களில் வரும் செப்டம்பர் மாதம் முதல் தலா ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி நீக்கப்பட்டு, ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி இணைக்கப்படவுள்ளது.

The post தமிழக ரயில்களில் ஏசி பெட்டிகள் அதிகரிப்பு ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ரயில்வே: இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, முன்பதிவில்லா பெட்டிகள் குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...