×

‘தீவிரவாதத்தை ஆதரிப்போரை கண்டிக்க தயங்க கூடாது’ பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி தாக்கு: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேச்சு

புதுடெல்லி: ‘எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கண்டிக்க தயங்கக் கூடாது’ என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கி பிரதமர் மோடி பேசினார். இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உட்பட 9 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) சுழற்சி அடிப்படையிலான தலைமைப் பொறுப்பை இந்தியா தற்போது ஏற்றுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்தது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்தனர்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ள தீர்க்கமான நடவடிக்கை அவசியம். தீவிரவாதம் எந்த வடிவத்திலும் வெளிப்பட்டாலும் அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். சில நாடுகள் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிப்பதை கொள்கையின் ஒரு பகுதியாக கொண்டுள்ளன. தீவிரவாதிகளுக்கு அவர்கள் அடைக்கலம் கொடுக்கின்றனர். அத்தகைய நாடுகளை கண்டிக்க எஸ்சிஓ அமைப்பு தயங்கக் கூடாது. தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதை தடுக்க பரஸ்பர ஒத்துழைப்புடன் நாம் செயல்பட வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை இப்பிராந்தியத்தில் நம் அனைவரின் பாதுகாப்பிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அண்டை நாடுகளை சீர்குலைக்கவோ அல்லது தீவிரவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கவோ ஆப்கானிஸ்தான் மண்ணை யாரும் பயன்படுத்தாமல் பாதுகாப்பது அவசியம். நமக்குள் பிராந்திய இணைப்பை அதிகரிக்க வேண்டும். இதில் சிறந்த இணைப்பு என்பது வெறும் பரஸ்பர வணிகத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, பரஸ்பர நம்பிக்கையையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த முயற்சியில் எஸ்சிஓ சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளை மதிக்க வேண்டும். குறிப்பாக, உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் எஸ்சிஓ அமைப்பில் புதிய உறுப்பினராக இணைந்துள்ள ஈரானை பிரதமர் மோடி வரவேற்றார்.

* சர்வதேச தடைகளால் வலுப்பெற்றுள்ளோம்

ரஷ்ய அதிபர் புடின் பேசுகையில், ‘‘உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளால் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து நாங்கள் வளர்ச்சி அடைந்து வருகிறோம். தாய்நாட்டை பாதுகாக்கும் எங்களின் நடவடிக்கைக்கு ஆதரவளித்த எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சீனா, ரஷ்யா இடையே இருப்பதை போல மற்ற உறுப்புகளுடனும் விரைவில் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் செய்யும் நடைமுறையை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.  சீன அதிபர் ஜி ஜின்பிங், ‘’பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். பொதுவான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்’’ என்றார். தனியாகவும், குழுவாகவும், நாடு தழுவிய அளவிலும் தீவிரவாதத்தில் ஈடுபடும் அரக்கனை முழு வீரியத்துடனும், உறுதியுடனும் எதிர்த்து போராட வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் பேசினார்.

* ஆன்மீகத்திலும் முன்னிலை

முன்னதாக, பிரதமர் மோடி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் மைய திறப்பு விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுகையில், ‘‘உலக அளவில் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. இந்தியா இன்று தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் மட்டுமின்றி ஆன்மீகம் உள்ளிட்ட பல துறைகளிலும் முன்னேறி வருகிறது’’ என்றார்.

Prime_Minister_Modi’s_speech_at_the_conference_on_Pakistan_to_condemn_those_who_support_terrorism

தீவிரவாதத்தை ஆதரிப்போரை கண்டிக்க, பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி, மாநாட்டில் பேச்சு

****************

2 நாள், 4 மாநிலம், ரூ.50 ஆயிரம் கோடி 50 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி,ஜூன் 5: பிரதமர் மோடி வரும் 7,8ம் தேதிகளில் 4 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 50 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து திட்டங்களையும் முடிக்க பிரதமர் மோடி ஒன்றிய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக வரும் 7,8ம் தேதிகளில் உபி, சட்டீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 50 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த 4 மாநிலங்களில் உபியை தவிர மற்ற 3 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை டெல்லியில் இருந்து முதலில் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் செல்கிறார். அங்கு ராய்ப்பூர்-விசாகபட்டினம் 6 வழிச்சாலை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதை தொடர்ந்து உபி மாநிலம் கோரக்பூர் சென்று அங்கு கீதா அச்சகம் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் 3 வழித்தடங்களில் வந்தேபாரத் ரயில்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு ஜூலை 8ம் தேதி தெலங்கானா மாநிலம் வாராங்கல் வருகிறார். அங்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து விட்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானர் செல்கிறார். அங்கும் திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதை தொடர்ந்து அவர் டெல்லி செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘தீவிரவாதத்தை ஆதரிப்போரை கண்டிக்க தயங்க கூடாது’ பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி தாக்கு: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Pakistan ,Shanghai Cooperation Conference ,New Delhi ,
× RELATED சொல்லிட்டாங்க…