×

வேங்கைவயல் விவகாரம் மறுப்பு தெரிவித்த 8 பேருக்கு டிஎன்ஏ சோதனை கட்டாயம்: புதுகை நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரும் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் குற்றவாளிகளை கண்டறிய 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டது. 3 பேர் மட்டுமே ஆஜராகி ரத்த மாதிரிகளை அளித்தனர். 8 பேர் ஆஜராகவில்லை.

இந்த சோதனையை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையை 8 பேரும் நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘8 பேரும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம்’ என உத்தரவிட்டது. இதையடுத்து, 8 பேரும் கடந்த 30ம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, டிஎன்ஏ பரிசோதனைக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெயந்தி, ‘டி.என்.ஏ மாதிரி பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை கட்டாயம் உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக 5ம் தேதி (இன்று) 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

The post வேங்கைவயல் விவகாரம் மறுப்பு தெரிவித்த 8 பேருக்கு டிஎன்ஏ சோதனை கட்டாயம்: புதுகை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vengai ,Puducherry ,Pudukottai ,Venkaivyal ,
× RELATED வேங்கைவயல் விவகாரத்தில்...