×

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.7.67 லட்சம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜர் கோயிலில் நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.7.67 லட்சம் செலுத்தியிருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீராமானுஜர் கோயில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் வருடம்தோறும் சித்திரை பிரமோற்சவம் 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.

இதில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீராமானுஜரை வழிபட்டு வணங்கி செல்வர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சித்திரை பிரமோற்சவம் விமர்சையாக நடந்து முடிந்தது. அப்போது, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோயில் வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில், 20க்கும் மேற்பட்ட கோயில் தன்னார்வ குழுவினர் பங்கேற்று உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ.7 லட்சத்து 67 ஆயிரத்து 438 ரொக்கமும், 7.1 கிராம் தங்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இவை அனைத்தும் கோயில் அதிகாரிகள், வங்கியில் செலுத்தினர்.

The post ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.7.67 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Sriperudur Ramanujar Temple ,Sriepruthur ,Pendal ,Sriperumutur Sriramanujar Temple ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டை உடைத்து நகை பணம் திருடியவர் கைது