×

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: கைது சட்டவிரோதம் – நீதிபதி நிஷா பானு; சட்டவிரோதம் இல்லை – நீதிபதி பரத சக்கரவர்த்தி; 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்று ஒரு நீதிபதியும், கைது செய்ததில் சட்ட விரோதமில்லை என்று மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்தனர். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 3வது நீதிபதி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்று உத்தரவிடக்கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, என்.ஆர்.இளங்கோ, பரணிகுமார் ஆகியோர் ஆஜராகினர். அமலாக்க பிரிவு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்க பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இதன் மூலம் சட்டவிரோதமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வாதிட்டார்.

அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ, ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ வழக்கு தொடரவில்லை. ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றார். செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு மீது வாதங்களை முன் வைத்த டெல்லி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என்று கோர முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. 15 நாட்கள் முடிந்தது முடிந்தது தான்.

கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம். கொரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி 15 நாட்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது எனவும், 15 நாட்கள் முடிந்து விட்டால் உலகம் முடிவுக்கு வந்து விடாது. வழக்கின் புலன் விசாரணையை தொடர அமலாக்க பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தனித்தனியாக மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.

நீதிபதி நிஷா பானு அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு அவருக்கோ அல்லது அவரது உறவினர்களுக்கோ தகவல் தெரிவிக்கப்படவில்லை. இது குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு எதிரானது. அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள தனி மனித உரிமைக்கு எதிரானது. வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அமர்வு நீதிமன்றம் அவரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பது ஏற்க கூடியதல்ல. நீதிமன்ற காவலில் இருக்கும்போது அமலாக்கத்துறை காவலில் விசாரிப்பதற்காக தரப்பட்ட காலத்தை நீதிமன்ற காவல் காலத்திலேயே சேர்க்க வேண்டும் என்று மனுதாரர் மேகலா தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

அமலாக்க பிரிவு தரப்பில், பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கு முன்பு சம்மந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்ப தேவையில்லை. இருந்தபோதிலும், செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு அவருக்கும் அவரது சகோதரருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதால் அவரிடம் இதுவரை விசாரணை நடத்த முடியவில்லை. எனவே, அவரை அமலாக்க பிரிவு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு உகதந்ததல்ல என்று வாதிடப்பட்டுள்ளது.

மேகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் மனு மீது வாதிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அதிமுகவில் இருந்த செந்தில்பாலாஜி கடந்த 2018ல் திமுகவில் இணைந்தார். இதையடுத்து, முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர்ந்தது. அரவக்குறிச்சி தேர்தல் முதல், செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொது வெளியில் தொடர்ந்து பேசி வருகிறார் என்று வாதிட்டார்.

பொதுவாக கைது நடவடிக்கையின்போது குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவுகள்தான் பின்பற்றப்படும். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்குமாறு கடந்த ஜூன் 15ம் தேதி இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு முரணாக அவரை 8 நாட்கள் அமலாக்க பிரிவு காவலில் விசாரிக்க அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற ஒழுக்கத்தின்படி அமலாக்க பிரிவின் விசாரணைக்கு அனுமதித்திருக்க கூடாது. எனவே, செந்தில் பாலாஜியை அமலாக்க பிரிவு காவல் விசாரணைக்கு உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவு சட்ட விரோதமானது.

ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை ஏற்க முடியாது. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு ஏற்கக் கூடியது, நிலைக்கத்தக்கது. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க பிரிவுக்கு அதிகாரம் இல்லை. நீதிமன்ற காவலில் இருந்தபோது அவரை அமலாக்க பிரிவு காவலில் விசாரிக்க அனுமதித்த காலத்தை நீதிமன்ற காவல் காலத்தில் சேர்க்க கூடாது என்ற அமலாக்க பிரிவின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பு வருமாறு: செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்க பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அதை செந்தில் பாலாஜி ஏற்க மறுத்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். பண மோசடி தடுப்பு சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டம். இந்த சட்டதின்படி ஒருவரை கைது செய்ய அமலாக்க பிரிவு இயக்குநர், மற்றும் துணை இயக்குநருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்கீழ் கைது நடவடிக்கையை மேற்கொள்ளும்போது சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல் தர தேவையில்லை. இதை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அமர்வு நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று ரிமாண்ட் செய்துள்ளார். இதில் எந்த சட்ட விதி மீறலும் இல்லை.

எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகதந்தல்ல. அவரை நீதிமன்ற காவலில் வைத்திருந்தபோது உத்தரவிடப்பட்ட அமலாக்க பிரிவு காவல் விசாரணை காலம் நீதிமன்ற காவல் காலத்தில் சேர்க்கப்படாது. அவரை அமலாக்க பிரிவு காவலில் எடுத்து விசாரிக்கலாம். இந்த நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் அதே மருத்துவமனையில் அடுத்த 10 நாட்கள் சிகிச்சை பெறலாம். அதன் பிறகு அவருக்கு அதே மாதிரியான சிகிச்சையை சிறையில் உள்ள மருத்துவமனையில் தர வேண்டும். அவரது மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்களும் சிறை மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை தரலாம். செந்தில் பாலாஜியின் உடல் நிலை சரியான நிலையில் இருக்கும்பட்சத்தில் அவரை காவேரி மருத்துவமனையிலிருந்து 10 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்த சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி அமலாக்க பிரிவு கோரலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

* மாறுபட்ட தீர்ப்பு வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதி யார்? தலைமை நீதிபதி முடிவெடுப்பார்
செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்று ஒரு நீதிபதியும், சட்ட விரோதம் இல்லை என்று மற்றொரு நீதிபதியும் தனித்தனியாக மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளனர். இதனால், இந்த தீர்ப்பில் மெஜாரிட்டி எட்டப்பட வேண்டும். அதற்காக 3வது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பார். அந்த தீர்ப்பு, இந்த தீர்ப்புகளில் எதனுடன் பயணிக்கிறதோ அந்த தீர்ப்பே இறுதியானது. ஏற்கனவே, 18 எம்எல்ஏக்கள் வழக்கில் இதே மாதிரி மாறுபட்ட தீர்ப்பு வந்தபோது 3வது நீதிபதி வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். நீதிமன்றத்தில் இதுபோன்ற நடைமுறைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கிலும் இரு தீர்ப்புகளும் தலைமை நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு இறுதி முடிவை எட்ட 3வது நீதிபதியை தலைமை நீதிபதி அறிவிப்பார்.

* அமலாக்கத்துறை கோரிக்கை: உச்ச நீதிமன்றம் மீண்டும் நிராகரிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜி அவருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்துகிறார். அதனால் எங்களால் அவரிடம் விசாரிக்க முடியவில்லை. இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றமே காலம் தாழ்த்தாமல் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோத்தகி, உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி முடிவுக்காக வழக்கு அனுப்பப்படும்போது, எப்படி அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதுதொடர்பான வழக்கை விசாரிக்க முடியும். செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை இத்தனை அவசரம் காட்டுவது ஏன் என்பது புரியவில்லை என தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரிக்கிறோம். இதில் ஆட்கொணர்வு வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைக்க ஒரு வார காலம் அல்லது கூடுமான அளவிற்கு விரைவாக அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

* தீர்ப்பை கேட்க நீதிமன்றத்தில் கூட்டம்
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு என்ற தகவல் பரவியதும் அந்த நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் குவிந்தனர். மூத்த நீதிபதி நிஷா பானு சென்னையிலும், நீதிபதி பரத சக்கரவர்த்தி மதுரை கிளையில் இருப்பதால் வீடியோ கான்பரன்சிலும் தீர்ப்புகளை வாசித்தனர். இதற்காக நீதிமன்ற அறையில் அனைவரும் கேட்கும் அளவுக்கு ஸ்பீக்கர் சத்தம் அமைக்கப்பட்டிருந்தது.

* சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை
மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி: செந்தில் பாலாஜியை கைது செய்ததில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை, அவரை நீதிமன்ற காவலில் அடைத்ததில் அமர்வு நீதிமன்றம் தனது கவனத்தை செலுத்தவில்லை என்று நீதிபதி நிஷா பானு உத்தரவில் தெரிவித்துள்ளார். கைது சட்ட விரோதம் என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார். செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்பதால் அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். அதே நேரத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பில் கைது நடவடிக்கையில் சட்ட விரோதம் இல்லை என்றும் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை முடிந்தபிறகு அவரை காவலில் எடுத்து அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கியுள்ளார். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு 3 வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படும். யார் அந்த நீதிபதி என்று தலைமை நீதிபதி முடிவு செய்வார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றார்.

* செந்தில் பாலாஜியை கைது செய்ததில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை.
* அவரை நீதிமன்ற காவலில் அடைத்ததில் அமர்வு நீதிமன்றம் தனது கவனத்தை செலுத்தவில்லை.
* கைது சட்ட விரோதம் என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: கைது சட்டவிரோதம் – நீதிபதி நிஷா பானு; சட்டவிரோதம் இல்லை – நீதிபதி பரத சக்கரவர்த்தி; 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Minister Senthil Balaji ,Judge ,Nisha Panu ,Bharatha Chakwardi ,Chennai ,Minister ,Senthil Balaji ,Bharathi ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக...