×

தூத்துக்குடி, நெல்லை, நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: 500-க்கும் மேற்பட்ட படகுகள் நங்கூரமிட்டு கரையில் நிறுத்திவைப்பு

தூத்துக்குடி: கடற்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தூத்துக்குடி, நாகை, நெல்லை, குமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை. குமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இதேபோன்று திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் 500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் தொழிலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றிருக்கும் மீனவர்கள் தீவு பகுதியில் தங்கி பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கூட்டப்பள்ளி, இடிந்தகரை உட்பட 9 மீனவ கிராமங்களில் சுமார் 10,000 நாட்டு படகு மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. மேலும் 1,295 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. வேதாரண்யத்தில் கடலில் பலத்த கற்று வீசுவதால் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து சூறாவளி காற்று வீசுவதால் 1,000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் கடல்மட்டம் தாழ்வாக காணப்படுவதால் கடல் நடுவே அமைந்து இருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடல் கடும் கொந்தளிப்பாக இருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை படகு சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் உள்பட பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் காற்றாலைகள் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் நீடிப்பதால் 80% காற்றாலைகளின் இயக்கத்தை நிறுத்தி வைத்திருப்பதாக தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post தூத்துக்குடி, நெல்லை, நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: 500-க்கும் மேற்பட்ட படகுகள் நங்கூரமிட்டு கரையில் நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,paddy ,nagai ,Thothukudi ,Thuthukudi ,Nadella ,Kumari ,Kumaril ,Dinakaran ,
× RELATED மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி