×

வேங்கைவயல் விவகாரம்; 8 பேரும் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அளிக்க வேண்டும்; புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் 8 பேரும் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அளிக்க வேண்டும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டது தொடர்பாக வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றக்கோரி திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய பரிந்துரைத்திருந்தனர். ஆனால், அதில் 3 பேர் மட்டுமே டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொண்ட நிலையில், மற்ற 8 பேர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான 8 நபர்களிடமும், டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப்படுவதற்கான விளக்க கடிதத்தை நீதிபதி வழங்கினார். அந்த கடிதத்துக்கு பதிலளிக்க்க ஒரு நாள் கால அவகாசம் அளிக்கபட்ட நிலையில், இன்று மீண்டும் ஆஜர்படுத்தபட்டனர்.

இதனை அடுத்து டிஎன்ஏ பரிசோதனைகாக 8 பேரும் ரத்த மாதிரி வழங்க புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து. டிஎன்ஏ பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 8 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்படவுள்ளது.

The post வேங்கைவயல் விவகாரம்; 8 பேரும் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அளிக்க வேண்டும்; புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pudukottai Atrocities Prevention Court ,Pudukottai ,Pudukottai Atrocity Prevention Court ,Vengai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...