×

மஞ்சூர் பஜாரில் மீண்டும் கரடி நடமாட்டம்: வியாபாரிகள்,தொழிலாளர்கள் பீதி

மஞ்சூர்: மஞ்சூர் பஜார் பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் கரடியால் வியாபாரிகள், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுத்தை,காட்டுமாடுகள்,கரடிகளின் நடமாட்டம் மிகுதியாக உள்ளது.பெரும்பாலும் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் நடமாடி வந்த விலங்குகள் சமீபகாலமாக குடியிருப்புகள் மற்றும் கடைவீதிகளில் உலா வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரடி ஒன்று இரவு நேரங்களில் பஜார் பகுதியில் நடமாடி வந்த கரடி ஒன்று கடைகளை உடைத்து பொருட்களை சூறையாடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது.

மேலும் அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி சத்துணவு கூடங்களின் கதவுகளை உடைத்து முட்டைகள், சமையைல் பொருட்களையும் ருசி பார்த்து சென்றது. கரடியின் அட்டகாசம் அதிகரித்ததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வலியுறுத்ததை தொடர்ந்து கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். இதை தொடர்ந்து பிடிபட்ட கரடி தொலைதூரமுள்ள அப்பர்பவானி வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக மஞ்சூர் பகுதியில் கரடியின் நடமாட்டம் இல்லாதாதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் கரடி நடமாட்டம் துவங்கியுள்ளது.

பஜார் பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தவுடன் கரடி கடைவீதிக்குள் நடமாடி வருகிறது. இரு தினங்களுக்கு முன் மஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள கழிப்பிடம் அருகே உள்ள குப்பை தொட்டிக்குள் உணவு தேடி கரடி நுழைந்துள்ளது. அப்போது அவ்வழியாக சாலையில் ஒருவர் நடந்து செல்வதை கண்ட கரடி குப்பை தொட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. கரடியை கண்டவுடன் பீதி அடைந்த அவர் அங்கிருந்து தலை தெறிக்க ஓடியுள்ளார். இரவு நேரங்களில் கரடி நடமாடி வருவதால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு இரவு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகளும் கரடி நடமாட்டத்தால் கலக்கமடைந்துள்ளனர்.

இதையடுத்து கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குந்தாபாலம் பழைய பெட்ரோல் பங்க் அருகே நடுரோட்டில் கரடி ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. இதை அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் தங்களது செல்போன்களில் போட்டோ மற்றும் வீடியோ பதிவு செய்து சென்றனர்.

The post மஞ்சூர் பஜாரில் மீண்டும் கரடி நடமாட்டம்: வியாபாரிகள்,தொழிலாளர்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Bear movement ,Manjoor Bazaar ,Manjoor ,Manjoor, ,Nilgiri district ,Bear ,Dinakaran ,
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை