×

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

இடைப்பாடி, ஜூலை 4: சேலம், இடைப்பாடி, ஏற்காடு உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் வரும் நான்கு நாட்கள் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சேலத்தில் நேற்று காலை முதலே வானம் மப்பும்-மந்தாரமுமாக காணப்பட்ட நிலையில், நண்பகல் வேளையில் வெயில் சற்று அதிகரித்து காணப்பட்டது. மாலையில் மீண்டும் வானத்தில் மேகமூட்டம் திரண்டது. இரவு 8 மணியளவில் சேலம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது. விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியது.

இடைப்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. மாலை 5.30 மணியளவில் திடீரென மழை பெய்தது. இடைப்பாடி மற்றும் கவுண்டம்பட்டி, வெள்ளாண்டி வலசை, தாவாந்தெரு, வெள்ளநாயக்கன்பாளையம், வீரப்பம்பாளையம், நாச்சிபாளையம், கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, ஆவணியூர், வெள்ளரிவெள்ளி, குரும்பப்பட்டி, சமுத்திரம், புதுப்பாளையம், வேம்பநேரி, தாதாபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் அரைமணி நேரம் கனத்த மழை பெய்தது. இந்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஏற்காடு: சுற்றுலா தலமான ஏற்காட்டில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மழை பெய்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரம் கனமழையாக கொட்டியது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். தொடர்ந்து இரவு 8 மணியளவில் வெளுத்து வாங்கிய மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்தது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

The post மாவட்டம் முழுவதும் பரவலாக மழை appeared first on Dinakaran.

Tags : Eadpadi ,Salem ,Yercaud ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில்...