×

அங்கக விவசாய திட்டம் மூலம் விவசாயிகளுக்கு சான்றிதழ்

வடலூர், ஜூலை 4: உணவு தானிய உற்பத்தியானது ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக சாதனை அடையப் பட்டுவரும் நிலையில் நஞ்சு இல்லா உணவு உற்பத்தியினை பெருக்க வேண்டியது மிக முக்கியமானதாகும். உணவினை நஞ்சு இல்லாமல் உற்பத்தி செய்யும் பொருட்டு அங்கக முறையில் வேளாண்மை செய்ய வேண்டியது அவசியம். அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு வேளாண்மை துறையால் விவசாயிகளிடையே பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாரம்பரிய வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி அங்கக விவசாய உற்பத்தியினை பெருக்கும் பொருட்டு இந்த திட்டத்தின் கீழ் 20 விவசாயிகளைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு முதல் கட்டமாக 20 ஹக்டர் நிலப்பரப்பில் அங்கக வேளாண்மை செய்யப்பட உள்ளது. இத்திட்டமானது தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அங்கக முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகள், தாவரப் பூச்சிக்கொல்லிகள், அங்கக உரங்கள் மற்றும் 3 ஆண்டுகள் முடிவில் இந்த திட்டத்தில் இணைந்து விவசாயம் செய்யும் விளைப் பொருட்களுக்கு தமிழ்நாடு விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு துறையுடன் இணைந்து விவசாயிகள் சுய சான்றிதழ் பெரும் பொருட்டு பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சிகள் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளது.
இத்திட்டம் தொடர்பாக குள்ளஞ்சாவடி பகுதியில் கிருஷ்ணங்குப்பம் கிராமத்தில் கம்பு சாகுபடி செய்திடும் விவசாயிகள் குழு அமைக்கப்பட்டு மண் மாதிரிகள் எடுக்கப்பட்டது.

மேலும் விவசாயிகளுக்கு கம்பு விதை மற்றும் உயிர் உரங்கள் மற்றும் டி.விரிடி போன்ற இடுபொருட்களை வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் வழங்கினார். இத்திட்டம் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் மலர்வண்ணன் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். மண் மாதிரிகள் சேகரிப்பினை துணை வேளாண்மை அலுவலர் கரிகாலன் செயல்படுத்தினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கார்த்திக் செய்தார். எனவே விவசாயிகள் இந்த திட்டத்தில் தங்களை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டு முழு ஆர்வத்துடன் பங்கு பெற வேண்டும் என்று குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

The post அங்கக விவசாய திட்டம் மூலம் விவசாயிகளுக்கு சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : Vadalore ,Dinakaran ,
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...